மாவோ-டெங் பூமியில்

9 நாட்களில் 4 பெருநகரங்களை மட்டும் பார்த்துவிட்டு சீனா போன்ற ஒரு பெரியநாட்டைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வரமுடியாது. எனினும் சில விஷயங்கள்
வெளிப்படையாகத் தெரிந்தன, சில உணர்வுகள் மனதில் பதிவாயின. அவற்றையே இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.



மாவோ- டெங் பூமியில் - 1

பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கம் என்றதுமே மாவோ நினைவகம் சென்றுபாதுகாக்கப்பட்டுள்ள அவரின் உடலை தரிசித்து அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்
எனும் ஆசை மேலோங்கியிருந்தது. அங்குசென்றதுமே வழிகாட்டியிடம் அதைத்தான் கேட்டேன். 
அவர் சொன்னார்: "மாவோ உடலைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அவர் மீது கோபத்தோடு இருப்பவர்கள் உடலை சிதைத்து விடுவார்களோ என அஞ்சி அரசு அனுமதிப்பதில்லை". வேறொரு பயணக்குழுவோடு வந்திருந்த கவிஞர் அக்னிபுத்திரனை யதேச்சையாகச் சந்தித்தபோது அவர் சொன்னது: "புனரமைப்பு வேலை நடப்பதால் அனுமதியில்லை என்று எங்கள் வழிகாட்டி சொன்னார்". 
எது உண்மை என்பதை நாங்கள் அறியோம். மொத்தத்தில் அவரும் நானும் மாவோ நினைவகத்திற்குள் செல்ல முடியவில்லை. அதன் வாசலில் நின்று ஏமாற்றத்தோடு 
அந்த கம்பீரமான கட்டடத்தைப் பார்த்தேன். அதன் இரு புறங்களிலும் உழைப்பாளர்களை சித்தரிக்கும் சிற்பவேலைப்பாடுகள் மிளிர்ந்தன. 
அவற்றின்உச்சியில் மாவோவின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. சதுக்கத்தின் மத்தியில் மாவோ நினைவகம் என்றால் மறுகோடியில் "நுழையமுடியா மாநகரம்" எனப்பட்ட சீனச் சக்கரவர்த்தியின் அரண்மனை இருந்தது. அந்தகாலத்தில் பொதுமக்களுக்கு அங்கு நுழைய அனுமதியில்லை.சக்கரவர்த்தி பார்க்க விரும்புவோர் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும், மீறி நுழைந்தால் தலைபோய்விடும். இப்போதோ திருவிழாகூட்டம்! உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான் ஏன் "மாநகரம்" என்று பெயரிட்டார்கள் என்பது புரிந்தது. நடக்கநடக்க போய்க்கொண்டே இருந்தது. அடுக்கடுக்கான ஒரே மாதிரியான மாளிகைகள் வந்து கொண்டேயிருந்தன. கால்வலி பின்னியதால் முழுவதையும் பார்க்காமல் பேருந்துக்கு திரும்பினோம். அந்த அரண்மனையின் வாசலில் மாவோவின் பெரிய உருவப்படம் இருந்தது. முடியரசு மறைந்து மக்கள் சீனக் குடியரசு மலர்ந்ததன் நினைவாக அது இருந்ததாகப் பட்டது. அரண்மனைக்குள் நுழையும் முன் அதன் முன் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டேன். 



மாவோ- டெங் பூமியில்- 2

உலகஅதிசயங்களில் ஒன்றாகிய சீனப்பெருஞ்சுவரை பார்த்து கொண்டிருந்தேன்.பெய்ஜிங்கிலிருந்து 60 கி மீ தூரத்தில் இருந்தது. அங்கு தெரிந்தது ஒரு துண்டு
தான்.மலையின் உச்சியில் வளைந்து நெளிந்து ஓடிக்கொணடிருந்ததைப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதனது அனைத்து கிளைகளோடு சேர்த்து கணக்
கிட்டால் 20000 கி மீ தூரம் இப்படி அந்தச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது என்பதை மனதில் இருத்தினால்தான் இது உலக அதிசயம் என்பது புரிபடும். பிரதான சுவரை மட்டும் 
எடுத்துகொண்டாலும் சுமார் 7000 கி மீ நீளம்! ஆண்டான், நிலப்பிரபு யுகங்களிலேயே மனித உழைப்பின் ஆற்றலும், அதை ஒருங்கிணைக்கும் நிர்வாகத் திறமையும் 
வெளிப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இத்தகைய கட்டுமானங்கள். தாங்கள் அநாகரிகர்கள் எனக் கருதிய மக்கள் கூட்டத்தினர் தங்கள் பூமிக்குள் வரக்கூடாது 
எனத் தடுக்கவே சீனச் சக்கரவர்த்திகள் இதையொரு வேலையாகச் செய்து வந்தார்கள். இந்தத் தடுப்பு பிறரை இங்கே வரவிடாமல் செய்தது போல இவர்களையும் 
வெளியே போகவிடாமல் தடுத்தது. சீனர்கள் பிறநாடுகளை கைப்பற்றி ஆண்டதாகதெரியவில்லை. ஆனால் பட்டு வியாரிகளும் யாத்ரீகர்களும் இதற்கு விதிவிலக்கு. 
நவீன பட்டுப் பாதை பற்றி இப்போது தீவிரமாக பேசிவருகிறது சீன அரசு. பாஹியானையும் யுவான் சுவாங்கையும் நினைத்துக் கொண்டேன். அவர்களது நினைவுக் குறிப்புகள் இல்லையெனில் இந்திய வரலாற்றில் ஒரு பகுதி மூளியாகப் போயிருக்கும். யாத்ரிகர்கள் பலரும் உயர்ந்து சென்ற அந்தச் சுவரில் சாரைசாரையாக ஏறிக் கொண்டிருந்தார்கள். இந்த யாத்ரீகன் ஏறவில்லை. இதயநோயாளிகள் முடிந்த அளவு மட்டுமே ஏறவேண்டும் என்று எச்சரித்தது ஓர் அறிவிப்பு பலகை. 




மாவோ-டெங் பூமியில் - 3

சீனச் சக்கரவர்த்திகளின் கோடைகால அரண்மனைக்கு சென்றோம். அங்கு கோடைகாலம் என்றால் நம்மூர் போல 42 டிகிரி எல்லாம் இல்லை, 27 தான். அதுவும் நாங்கள் கண்டது அதிலும் மிதமான வெயிலைத்தான். இதையே தாங்கமுடியாமல் ஒருபெரிய செயற்கை ஏரியை வெட்டி அதையொட்டிய குன்றின் அடிப்பரப்பிலிருந்து உச்சிவரை 
மாளிகை கட்டியிருந்தார்கள். அதற்குள் இப்போது பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. ஏரிக்குள் ஒரு குட்டி தீவு இருந்தது. அதன் பெயர் நான்ஹு. அதற்குப் போக பாலம் கட்டியிருந்தார்கள். அங்கு சென்றோம். அங்கிருந்த அறைகளே பிரமாதமாக இருந்தன. என்னைக் கவர்ந்தது ஒரு கோயில். கருவறை சிறு பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. அதன் கண்ணாடிக்கதவு வழியாக எட்டிப் பார்த்தேன். ஒரு வினோத கடவுள் உருவம் அலங்காரமாக இருந்தது.அது டிராகன் ராஜாவாம். 500 ஆண்டு பழமையான 
அந்தக் கோயில் மழை வேண்டி கட்டப்பட்டதாம். நம்ம நாடாக இருந்தால் இப்படியொரு கோயிலை விட்டு வைத்திருப்பார்களா? இந்நேரம் பூஜை புனஸ்காரம் என்று கிளம்பியிருப்பார்கள். நிறைய சீனர்களும் அந்தத் தீவைச் சுற்றிப்பார்த்து கொண்டிருந்தார்கள், என்னளவுக்குகூட யாரும் ஆர்வமாக அதை எட்டிப் பார்க்கவில்லை. சீனாவில் 
மதம்-கடவுள் நம்பிக்கை மிகவும் குறைந்து போயிருக்கிறது எனும் மேலைநாட்டு ஆய்வுகளின் முடிவுகள் சரியே என்று பட்டது. அங்கே சீன வருஷப்பிறப்புதான் முக்கியமான திருவிழா என்று உள்ளூர் வழிகாட்டி சொன்னதும் அதை உறுதிப்படுத்தியது. 




மாவோ-டெங் பூமியில் - 4

பெய்ஜிங்கில் பார்த்த "ஆக்ரோபாடிக் ஷோ" எனப்பட்ட உடல்வித்தை காட்சிகள் இன்னும் என் கண்பட்டையில் ஒட்டியுள்ளன. அதைப் பாட்டுடை நடனம் என்பதா? 
விதவிதமான உடல்வளைவு என்பதா? சர்க்கஸ் என்பதா? எல்லாம் கலந்த புதுமை என்பதா? பேலன்சிங் எனப்படும் சமன்நிலைக் காப்பு அதன் அடிநாதம். பெண்கள் கைக் குச்சியில் ஆடும் அந்தப் பீங்கான் தட்டுகள் நம்மை மலைக்க வைக்கின்றன. குச்சிக்கும் தட்டுக்கும் கண்ணுக்குதெரியா ஏதோ கனெக்சன் இருக்கும் என்று நாம் சந்தேகிக்கும்போது குச்சிகளும் தட்டுகளும் தனித்தனியாக விழுந்து கேலிச்சிரிப்பு சிரித்தன. ஒவ்வொரு நாற்காலியாக போட்டு ஏறிக் கொண்டேயிருக்கிறான் அந்த 
இளைஞன். அதன் உச்சியில் போய் தலைகீழாக வித்தைகள்! ஐயோ விழுந்துவிடக்கூடாதேஎன்று நமக்கு தவிப்பு.அவனோ சிரித்தபடி குதிக்கிறான்.சர்க்கஸில் மரணக் 
கிணறு பார்த்திருக்கிறோம். உருண்டையின் உள்ளே போய் ஒருவர் பைக் ஓட்டுவார். அதுவே அதிசயமாக இருக்கும் எப்படி தலைகீழாக வரும்போது விழாமலிருக்கிறார் 
என்று. அதே மாதிரியான உருண்டையில் ஒவ்வொருவராக எட்டு பைக்காரர்கள் உள்ளே போய் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல் ஓட்டினால் எப்படி இருக்
கும்? கற்பனையாவது செய்ய முடிகிறதா? அது கண்முன் நடந்தது. பிரமிப்பு அகலும்முன் அந்த எட்டுபேரும் கூண்டைவிட்டு வெளியே வந்து கையசைத்து எங்களுக்கு விடை கொடுத்தார்கள். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. சீனாவின் இந்த பாரம்பரிய உடல்வித்தை கலையை கம்யூனிஸ்டுஅரசு கவனமாக பேணி வருகிறது. 
கம்யூனிஸ்டுகள் என்றால் சகல பாரம்பரியங்களுக்கும் எதிரிகள் என்று நினைக்கப் படுகிறது. அதில் நல்லது கெட்டது பார்த்து முன்னதை பாதுகாப்பவர்களே அவர்கள் என்பதற்கு இந்த அரிய கலை நிகழ்வு ஓர் ஆதாரமாய் இருந்தது. 




மாவோ-டெங் பூமியில் - 5

பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கு புல்லட் ரயிலில் சென்றோம். மணிக்கு 300 கி மீ வேகம். உள்ளே ஒரு குலுக்கல் இல்லை. இருக்கை வசதி , இதர ஏற்பாடு எல்லாம் 
விமானம் போல. 1318 கி மீ தூரத்தை 4 3/4 மணி நேரத்தில் கடந்தோம். பெய்ஜிங் சீனாவின் அரசியல் தலைநகரம் என்றால் ஷாங்காய் வணிகத் தலைநகரம். நமது டில்லி, மும்பை போல. அதனால்தான் அவற்றை இணைக்க புல்லட் ரயில் என்று நினைத்தேன். வழிகாட்டியோ "சீனாவின் முக்கிய நகரங்களுக்கு எல்லாம் புல்லட் 
ரயில் ஓடுகிறது" என்றார். என்னால் நம்ப முடியவில்லை. கூகுள் சென்று பார்த்தால்:"2017 ஜனவரியில் ஷாங்காய்க்கும் குன்மிங் மாநகரத்திற்கும் இடையிலான புல்லட் ரயில் சேவை துவங்கியது. இதன் நீளம் 2252 கி மீ தூரம். அதை 11 மணிநேரத்தில் கடக்கிறது. முன்பு இதற்கு 34 மணிநேரம் ஆனது. சீனா தனது பெருநகரங்களில்
80% க்கு புல்லட் ரயில் சேவையைக் கொண்டுள்ளது. அவை கடக்கும் மொத்த தூரம் சுமார் 20000 கி மீ." இந்தியாவில் இன்னும் ஒரு புல்லட் ரயில்கூட இல்லை என்பதை 
மனதில் கொண்டால்தான் இந்தச்சாதனையின் முழுப் பரிமாணம் கிட்டும். விமான நிலையங்கள் பிரமாதமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.ஆனால் சீனாவில் ரயில் நிலையங்களும் அபாரமாகஇருக்கின்றன.நாம்இருப்பது ஓர்ஆசியநாட்டிலா அல்லது ஐரோப்பிய நாட்டிலா என்று சந்தேகம் வந்தது. உள்கட்டமைப்பு வசதியைப் பொறுத்த
வரை சீனா ஐரோப்பாவோடு போட்டிபோடுகிறது. ஐரோப்பாவையும் பார்த்தவன் என்கிற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உள்ளூர் வழிகாட்டி சொன்னது: "ஷாங்காயில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மின் பற்றாக்குறை இருந்தது. பிறகு அமைக்கப்பட்ட அணுமின் நிலையத்தை தொடர்ந்து அந்தப் பிரச்னை தீர்ந்தது." 




மாவோ-டெங் பூமியில் 
- 6

ஊரே ஒளி அலங்கார ஆடையில்

ஷாங்காய் நகரை தனது பெருமையின் நவீன அடையாளமாகக் கொண்டுள்ளது சீனா. 128 மாடிகள் உள்ள "ஷாங்காய் கோபுரம்" எனும் கட்டடத்தின் உச்சியில் ஏறி ஊரைப் பார்க்கலாம் என்று அழைத்து போனார்கள். அன்று பனிமூட்டமாக இருந்தது, மேகங்கள் அந்தக் கட்டடத்தின் உச்சியில் தவழ்ந்ததில் அது தெரியவில்லை.
அங்கு போய்ப்பார்த்தால் ஊர்தெரியாது என்று அதன்பக்கத்திலிருந்த 88 மாடிகள் கட்டடத்திற்கு அழைத்துபோனார்கள். ஒருநிமிடம்கூட இருக்காது உச்சிக்கு தூக்கி
கொண்டு போய்விட்டது லிப்ட். அங்கிருந்து ஊரைப் பார்க்கும்போதுதான் ஒருநதியின் கரையில் அது எழுந்திருப்பது தெரிந்தது. ஊரைப்பார்க்க கண்கோடி வேண்
டும். அப்படியொரு அழகு.அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் மாஸ்கோ, ஷாங்காய், நியூயார்க் ஆகிய நகரங்களின் பருந்துப் பார்வை படங்களைப் போட்டு, இவற்றில் எது அழகு என்று கேட்டிருந்தார்கள். ஷாங்காய்தான் அழகாக இருந்தது. அதை மேலும் உறுதிப் படுத்தியது இரவு அந்தநதியில் ஒரு பெரும்படகில் செய்த பயணம். இரு கரைகளிலும் இருந்த நெடும் கட்டடங்கள் விதவிதமான வண்ணவிளக்குளால் ஜொலித்தன. மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி வாசலில் போடப்பட்டிருக்கும்
லொக்கடா மின்விளக்கு வரிசைகளைப் பார்த்தே சின்னவயதில் மிரண்டது நினைவுக்கு வந்தது. இங்கோ ஒரு மாநகரமே ஒளி அலங்கார ஆடை உடுத்தியிருந்தது. 
நித்தம் நித்தம் உடுத்துமாம்! எவ்வளவு மின்சாரம், எவ்வளவு செலவு! வழிகாட்டி சொன்னர்: "இந்த அலங்காரத்திற்கான மின்சாரத்தை அரசு இலவசமாக தருகிறது." 




மாவோ-டெங் பூமியில் - 7

கொத்துகொத்தாய் "ஸ்லம்கள்"

ஷாங்காயில் 2 கோடியே 40 லட்சம் பேர் வாழ்கிறார்கள். உலகிலேயே அதிகம் பேர் வசிக்கிற மாநகரம் இதுதான். பெய்ஜிங்கில் 2 கோடிப் பேர் வசிக்கிறார்கள். இரண்
டும் பார்த்தால் துபாய், சிங்கப்பூர் போல இருந்தன. அவை போலவே நெடிய கட்டடங்கள், அழகான ரோடுகள், சுத்தமான வீதிகள். பைக்குகள் இல்லை.எங்கும் படகுக்கார்
கள், இல்லையென்றால் சைக்கிள். போக்குவரத்து நெரிசலை எப்படி சமாளிக்கிறார்கள்? சனி, ஞாயிறில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் இதர நாட்களில் சுழற்சிமுறையில் ஒருபகுதி கார்களைத்தான் வெளியேஎடுக்கமுடியும்! இருநகரங்களிலும் ஆங்காங்கே கொத்துகொத்தாய் "ஸ்லம்கள்" இருந்தன. அதாவது பழைய ஓட்டு வீடு
களைத்தான் அப்படி அழைத்தார் உள்ளூர்வழிகாட்டி. அங்கு வசிப்போருக்கு வேறுஇடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு தரப்படுகிறது என்றும் விரைவில் இந்த ஸ்லம்கள் இடிக்கப்பட்டு இங்கும் அடுக்குமாடி கட்டடங்கள் வரும் என்றார். பயணிகளில் ஒருவர் இப்படி ஆச்சரியப்பட்டார்: " கட்டணக் கழிப்பிடம் என்றால்தானே சுத்தமாக இருக்கும் என்கிறோம். இங்கே இருப்பவை எல்லாம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஆனாலும் சுத்தமாக இருக்கிறதே!" இருநகரங்களிலும் போலிஸ்காரர்களே 
தென்படவில்லை. ஒரு போலிஸ் ஸ்டேசன் தென்பட்டது. அதன் வாசலிலும் போலிஸ்காரர்கள் இல்லை. ஆனாலும் போக்குவரத்தில் சிக்கல்இல்லை. கேமரா கண்காணிப்பு இருக்கும்போலும். இரண்டே இரண்டு பிச்சைக்காரர்களை பார்த்தேன். கால் முடமான ஒருவர் விமானநிலையத்தின் வெளிப்புறத்தில் படுத்திருந்தார். அவர் வைத்திருந்த குவளையில் காசுகள்விழுந்திருந்தன.இன்னொருவர் ஒருஇந்திய ஹோட்டலின் வெளியிலிருந்த குப்பைதொட்டியிலிருந்து எதையோ பொறுக்கி கொண்டிருந்தார். 




மாவோ-டெங் பூமியில் - 8

ஒரு பூவின் விலை ஒரு மாநகரம்..!

ஷாங்காயிலிருந்து ஹாங்காங்கிற்கு பறந்தோம். அங்கே மீண்டும் இமிகிரேசன் ஆய்வுகள். அது பிரிட்டனிடமிருந்து சீனாவிற்கு திரும்ப வந்துவிட்டதே..? வந்து
விட்டதுதான் , அங்குள்ள அரசு அலுவலகங்களிலும் இப்போது சீன தேசியக்கொடியாகிய செங்கொடிதான் பறக்கிறது. ஆனாலும் அது ஒரு "சிறப்பு நிர்வாகப் பகுதி".
ஆகவே ஒரு வெளிநாட்டுக்குப் போவது போல அவ்வளவு பரிசோதனைகளும் நடந்தன. அதைவிட ஆச்சரியம் ஹாங்காங்கில் சீனாவின் யுவான் நாணயம் செல்லாது. 
அது தனக்கான நாணயத்தைக் கொண்டுள்ளது. அது "ஹாங்காங் டாலர்". பஸ்சில் ஏறியவுடன் உள்ளூர் வழிகாட்டி பெருமையோடு பகர்ந்தது: "1997ல் ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக மாறினாலும் நாங்கள் சுயாட்சியோடு இயங்குகிறோம். சீனாவின் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது. உதாரணமாக குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் என்று சீனாவில் சட்டம். மீறினால் தண்டம் கட்டவேண்டும். இப்போது அதை இரண்டு குழந்தைகள் என்று ஆக்கியிருக்கிறார்கள். அந்தச்சட்டம் எங்களுக்கு பொருந்தாது". "ஒரு நாடு இரு வாழ்முறைகள்" என்று பிரிட்டனோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை சீன அரசு இப்போதும் நடைமுறைப்படுத்துகிறது. நாமோ காஷ்மீரை இணைக்
கும்போது அந்த ராஜாவோடு போட்ட ஒப்பந்தத்தை வேஸ்ட் பேப்பராக கருதுகிறோம். பேருந்து ஊருக்குள் சென்று ஒரு சதுக்கத்தில் நின்றது. அதன் மத்தியில் ஐந்த மடல்களைக் கொண்ட நம்மூர் தாமரை போன்ற ஒரு தங்க மலரின் சிலை இருந்தது. வழிகாட்டி சொன்னார்: "பிரிட்டீஷாரிடமிருந்து ஹாங்காங்கைப் பெற்றபோது சீன அரசு பதிலுக்கு இந்தப் பூவைக் கொடுத்தது". அந்தப் பூவின் பெயர் பவ்ஹினியா; அதன் விலை ஒரு மாநகரம்! 




மாவோ-டெங் பூமியில்- 9

டிஸ்னிலேண்டில் "சிங்க ராஜா" நாடகம்

ஹாங்காங்கில் டிஸ்னிலேண்ட் என்றதும் எனக்கு பெரிதாக ஆர்வம் வரவில்லை. காரணம் ஏற்கெனவே அதை பாரிசில் பார்த்திருக்கிறேன். ஆனால் போய்ப் பார்த்
தால் இது முற்றிலும் வேறுமாதிரியாக இருந்தது. இதன் கருத்தியல் "நேற்றைய,நாளைய, கற்பித உலகங்கள்" எனப்பட்டது. ஆப்பிரிக்க காட்டுக்குள் நதி வழி பயணித்தால் எப்படி இருக்கும் எனும் அனுபவத்தை நமக்கு தந்தார்கள். தத்ரூபமாக யானைகள் குளித்தபடி நீரைப் பீச்சி அடித்தன. எதிர்காலத்தில் ராக்கெட் பயணம் எப்படிஇருக்கும் எனும் திரில்லும், த்ரீ டி சினிமாவில் நம்கண்ணருகே வந்துபோகும் பொருட்களைகண்டு அதிசயத்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.இதற்கெல்லாம் 
உச்சம் "சிங்க ராஜா" நாடகம். திடீரென உயரும் தாழும் அந்த வட்ட அரங்கில் அது நிகழ்ந்தது. ஒரு வாயிலில் யானை மீது சிங்கராஜா அமர்ந்து தலையை ஆட்டி கண்
களை உருட்டி பேசியது. இப்படி இதர மூன்று வாயில்களிலும் யானைகள் மீது வேறு மிருகங்கள் அமர்ந்து அளவளாவின. விசையால் இயங்கும் பெரும் பொம்மைகள். 
நவீன ஸ்டேஜ் புராப்பர்ட்டிகள் என்றாலும் நாடககலையின் இதர அனைத்து கூறுகளும் இருந்தன. பாடல்கள் வசனங்கள்தாம் புரியவில்லை. ஆனால் ஏதோவொரு 
தீயசக்திக்கு எதிராகப் போராடுவதும், அதில் வெற்றிபெற்று கொண்டாடுவதும் அவர்களது நடன பாவங்களிலிருந்து புரிபட்டது. நமது நாடகக்கலைஞர்கள் பார்க்க 
வேண்டிய நிகழ்வு என்று நினைத்துக் கெண்டேன். 




மாவோ-டெங் பூமியில்- 10

சீன அதிபருடன் "பேச்சுவார்த்தை நடத்தினோம்!"

மேடம் டுசாத்தின் மெழுகுகூடத்தை லண்டனில் பார்க்க முடியாமல் போனது. அந்தகுறை ஹாங்காங்கில் தீர்ந்தது. இங்கே அதுவொரு குன்றின் உச்சியில் இருந்தது. 
அதற்கு ரயில் விட்டிருந்தார்கள். அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என்று சுமார் நூறுபேரை மெழுகுச்சிலைகளாக கொண்டுவந்து நிறுத்
தியிருந்தார்கள். தொடவிடமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அவரவர் தோளில் கைபோட்டு படம் பிடித்து கொண்டார்கள். இந்திய தலைவர்களை பொறுத்தவரை பிரதமர் மோடி பளிச்சென்று கண்ணில்படும்படி ஓரிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்து காந்திஜி நின்றார். நேருவைக் காணோம். அந்த கூடத்தை அமைத்தவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். அது, சீனஅதிபருக்கு மட்டும் விசாலமானஇடம் கொடுத்து அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க,அவருக்கு சமமாக வருகையாளர்கள் அமர்ந்து படம் பிடிக்க நாற்காலி போட்டிருந்ததிலும் வெளிப்பட்டது. காந்திஜி அருகே நின்று படம் பிடித்துக் கொண்டேன்.அப்புறம் சீன அதிபரோடு நானும் என் மனைவியும் "பேச்சுவார்த்தை நடத்தினோம்!" 




மாவோ-டெங் பூமியில் 11

அந்த ஊரே சூதாட்ட கூடம்தான்..!

மெகாவ் எனும் தீவு 1999வரை போர்ச்சுக்கலின் பிடியில் இருந்தது. அந்தஆண்டில்தான்ஹாங்காங்கிற்கு போடப்பட்ட ஒப்பந்தம் போல ஒன்றைப் போட்டு அதைத் தன்னோடு 
இணைத்துக் கொண்டது சீனா. ஹாங்காங்கிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஒரு சிறு கப்பல் மூலம் அங்கு சென்றோம். அந்த ஊர் கேசினோ எனப்படும் சூதாட்டக்கூடங்களுக்கு பெயர் போனது. " சீனாவில் கேசினோகளுக்கு அனுமதிஇல்லை. ஹாங்காங்கில் தரையில் அனுமதி இல்லை; கடலில் மட்டுமே அனுமதி. இங்கோ ஊரே கேசினோதான்" என்றார்வழிகாட்டி.ஹாங்காங்கில் ஒருநாள்இரவை சொகுசுகப்பல் ஒன்றில் கழித்தோம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மட்டும் பார்த்திருந்த சூதாட்டகூடத்தை அந்தகப்பலில்தான் முதன்முதலாகக் கண்டேன். ஊருக்குள்ளிருந்த ஹோட்டல்களில் அதைக் காண முடியவில்லை. மெகாவ்விலோ ஹோட்டல் என்றாலே கேசினோதான். ஒரு மிகப் பெரிய கேசினோ ஹோட்டலுக்கு எங்களை அழைத்துபோனார்கள். அதன்பெயர் "வெனிசியன்".அதன்பெயருக்கு ஏற்ப போன்சாய் வடிவிலான வெனிஸை அதன் நீர்வழிப்பாதை,அதில்மிதக்கும் கொண்டலா எனும் சிறுபடகுகளோடு உருவாக்கியிருந்தார்கள்.அதைவிட அதிசயம் அதன்மீது ஒருசெயற்கைவானம் பூத்திருந்தது! அச்சுஅசலாக நீலவண்ணவானத்தை சிருஷ்டித்திருந்தார்கள். அந்த ஹோட்டலின் பிரம்மாண்டமான அரங்கில் விதவிதமான சூதாட்டமேசைகள் இருந்தன. சீட்டுவிளையாட்டு,சுற்றும்வட்டு,விடியோகேம்ஸ் என்று தனித்தனி பிரிவுகள். ஆயிரக்கணக்கான டாலர்ளைக் கொடுத்து வெறும் டோக்கன்களை 
வாங்கிக் கொண்டு உள்ளே போன ஒரு சீனரைப் பரிதாபமாகப் பார்த்தேன். மெகாவ்வும் சுயாட்சி அந்தஸ்துடன் இயங்கும் ஒரு "சிறப்பு நிர்வாகப் பகுதி", அதற்கென்றும் தனிநாணயம். சூதாட்டகூடங்கள் நடத்த சுயாட்சி! உள்ளூர் வழிகாட்டி சொன்னார்: "கேசினோ நடத்துவதால் கிடைக்கும் ஆதாயத்தின் ஒருபகுதியை நிர்வாகமானது மக்களுக்கு ஆண்டுதோறும் போனசாக வழங்குகிறது!" ஐரோப்பிய முதலாளியத்தின் ஒரு சீரழிவு கலாச்சாரத்தில் மக்களையும் பங்குதாரராக்கிக் கொள்ளும் தந்திரத்தை அந்த சுயாட்சி பிரதேச ஆட்சியாளர்கள் போர்ச்சுக்கலிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பெற்றிருந்தார்கள். 



மாவோ-டெங் பூமியில் - 12

அ மா கோயிலில் கந்தசாமி மரம்..!

இந்தத் தீவிற்கு மெகாவ் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. போர்த்துகீசியர்கள் வந்தபோது இங்கிருந்த சீன மீனவர்கள் ஒரு தெய்வத்தை வணங்கி 
வந்தார்கள். இது என்னவென்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது அ மா கோவ். அதாவது அம்மாவின் கோயில். சீன மொழியிலும் தாய்க்கு அம்மாதான்! கோயிலில் 
உள்ள கோ எனும் பகுதி சீனத்திலும் அதே அர்த்தத்தில்! ஆசியக்கண்டத்தில் மொழிகளுக்கிடையேயான உறவுநிலை இன்னும் தீவிரமானஆய்வை வேண்டுகிறது.சீனர்கள் சொன்னதை மெகாவ் என போர்த்துகீசியர்கள் உச்சரிக்க அதுவே தீவின் நாமகரணம் ஆனது. அந்தப் பழமையான கோயில் இனனும் இங்கே உள்ளது. விக்கிரகம் 
சீனப் பெண்ணுரு. தாய்த்தெய்வ வழிபாடு இந்தச் சிறு தீவிலும் இருந்தது நிச்சயமானது. வழிபாட்டிற்கு பெரியபெரிய ஊதுபத்திகளை ஏற்றி வைக்கிறார்கள். இதிலும் 
நமது நாட்டு சாயல் தெரிந்தது. இங்கேயொரு "கந்தசாமி மரம்" உள்ளது. அதாவது நினைத்ததை எழுதி இந்த மரத்தில் கட்டினால் நடக்கும் எனும் நம்பிக்கை. பக்கத்திலேயே, கட்டும் அந்த அட்டைக்கு ஒருவர் கடைபோட்டிருந்தார். மரத்தின் இரும்புவேலியில் பலஅட்டைகள் கட்டப்பட்டும் கிடந்தன.ஆனாலும் கோயிலில் வெளிநாட்டுபயணிகள்தாம் அதிகம் இருந்தார்கள்; சீனர்கள் குறைவுதான். மெகாவ் கடற்கரையில் ஒரு பெரிய பெண்சிலை உள்ளது. அது கடல்தாயாம்! எந்தநாட்டு மக்களானாலும் தாயின் 
நினைவு மனிதர்களைச் சுற்றிசுற்றி வருகிறது. 




மாவோ-டெங் பூமியில்- 13

சீனாவைப் பற்றி என்ன முடிவு கட்டுவது?

மெகாவ்விலிருந்து அந்தசிறுகப்பலில் பயணித்து நேரே ஹாங்காங் விமானநிலையம்புகுந்துவிட்டோம்.அங்கிருந்து சென்னைக்கு நேரடிவிமானம். பயணிக்கும்போது,கண்ட
அந்தநான்கு சீன நகரங்கள் பற்றி மனம் அசை போட்டது. ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டதுபோல இவற்றை வைத்துமட்டும் சீனாபற்றி ஒரு முழுமையான முடிவுக்கு வரமுடியாது. அதிலும் கிராமப்புறத்தை நெருங்கி பார்க்கவில்லை. பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் போகும்போது ரயில் பயணத்தில் தென்பட்டதுதான். கண்ணில்பட்ட கிராமங்கள் 
கூரைவீடுகளையோ தகரக் கொட்டகைகளையோ கொண்டில்லை. கான்கிரீட் வீடுகள் அல்லது நல்ல ஓட்டு வீடுகள். அந்த பெருநகரங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 
பளிச்சென்று தெரிந்தது. ஆனால் அதன் பலன் எந்த அளவுக்கு மக்களிடம் பரவலாகச் சென்றிருக்கிறது? தனியார்துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டாலும் பொதுத்துறை அங்கே தொடர்கிறது. "சீனாவில் யாரும் சாசுவதமாக எதையும் உரிமை கொண்டாட முடியாது.காரணம் சகல செல்வங்களும் எதன்மீது நிற்கிறதோ அந்த நிலம் அரசுக்கே சொந்தம்" 
என்றார் உள்ளூர் வழிகாட்டி. சீனாவிற்கு கிளம்பும்முன், அங்கே நீண்டகாலம் வாழ்ந்திருந்த ஒரு பத்திரிகையாளர் சொன்னது நினைவுக்கு வந்தது. அது: " பணக்காரனாக பிறக்க நேர்ந்தால் இந்தியாவிலும் ஏழையாகப் பிறக்க நேர்ந்தால் சீனாவிலும் பிறக்க விரும்புகிறேன். காரணம் இந்தியாவில் பணக்காரனது சொத்துக்கு நல்ல பாதுகாப்பு, சீனாவில் ஏழைக்கு அடிப்படைத் தேவைகள் உத்திரவாதம்". சீனாவிலிருந்து திரும்பியதும் இந்த செய்தி கண்ணில்பட்டது: "மொத்த உள்நாட்டுஉற்பத்தியும் தனிநபர் சராசரிவருமானமும் இந்தியாவைவிட சீனாவில் மூன்று மடங்கு அதிகம்". இது ஐஎம்எப் பை மேற்கோள்காட்டி டைம்ஸ்ஆப் இண்டியா ஏடு சொல்வது.(2-6-17) இந்த இரண்டு கணிப்புகளும், நான்அங்கே நேரில்கண்ட சிலகாட்சிகளும் மாவோவின் லட்சிய சிந்தனையும் டெங் சியோபிங்கின் காரியார்த்த சிந்தனையும் கைகோர்த்து நடைபோடுவதை உணர்த்துகின்றன என்று பொதுவாக கூறலாம். இந்த இரண்டில் எந்தவொன்று தளர்வுற்றாலும் முழுமையான வளர்ச்சி கிட்டாது. டெங்கின் பங்களிப்பு பற்றி "விசாரணைகள்:
உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல்" நூலில் விரிவாகப் பேசியிருக்கிறேன். 



(பயணம் முடிந்தது) 

Comments