தமிழக மக்கள் ஒற்றுமை மேடை உதயம்



வேறுபடுத்தி மக்களைப் பிரிக்கும் மதவெறியை வீழ்த்தவும், வேற்றுமையில் ஒற் றுமை வளர்க்கும் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கவும் களமிறங்கிச் செயல்படுவதற்காக ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ உதயமானது. மதவெறியை வீழ்த்தி, நல்லிணக் கத்தை உயர்த்திப் பிடிக்கும் படையாக இது பரிணமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆர்எஸ்எஸ்-பாஜக பின்புலத்தோடு இந்தியாவின் பன்முகப் பண்பாட்டைச் சீர்குலைக்கவும், மக்களிடையே மதவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. மாற்றுக் கருத்துகளையும் மக்கள் நல்லிணக்கச் சிந்தனைகளையும் பரப்புகிறவர்கள் மீது கொலை உள்ளிட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் இது பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.இந்தச் சூழலில் பல்வேறு துறைகளையும் தளங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்த இயக்கமாக ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ உருவெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ‘சென்னை மக்கள் மேடை’ அமைப்பும் தொடங்கப்பட்டது.சிஐடியு தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ, சவுந்தரராசன் உரையாற்றுகையில், “மக்களிடையே வினையாற்றும் விரிந்த மேடையாய் இதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் இருக்கிறது,” என்றார்.மதவெறியால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது தொழிலாளர் வாழ்க்கைதான். தமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 40 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இப்படி தங்கள் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் வேலைக்குச் சென்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கு என்று ஒரு சட்டமும் இல்லை. மற்ற நாடுகளில் வேலைக்குச் சென்றவர்கள், இப்போது அந்த வேலைகளை இழந்து நாடு திரும்புகிறார்கள்.கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் தொழிலாளர் ஊதியம் அதிகரிக்கவில்லை. இங்கிலாந்தில் ஊதியத்தின் உண்மை மதிப்பு உயரவில்லை. அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், அவர்கள் முதலாளித்துவத்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது, முதலாளித்துவம் தொடரக்கூடாது என்றும் சோசலிசமே மாற்று என்றும் கருத்துக் கூறியிருக்கிறார்கள். சோசலிசத்தை எப்படி அடைவது என்பதில் மாறுபட்ட அணுகுமுறை இருக்கலாம், ஆனால் முதலாளித்துவம் தீர்வல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

ஏமாற்றத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு எழுவதைத் தடுக்க, பல நாடுகளிலும் பல மாறுபட்ட வழிகள் கையாளப்படுகின்றன. இந்தியாவில் வகுப்புவாதம் பயன் படுத்தப்படுகிறது. பொய்களால் ஆட்சியைப் பிடித்தவர்கள் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்வியடைந்திருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகிறார்கள். 2019 தேர்தலில் மோடி பெயரைச் சொல்லி மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தங்களோடு இணைந்துள்ள தொழிலாளியும் விவசாயியும் போராடுவதை பாஜக சங்கங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறிய சவுந்தரராசன், “பிற்போக்குத்தனங்களை வெட்டிச் சாய்க்கவும், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கவும் இந்த மேடை இனி உருவாக்க வேண்டியது ஒரு படை,” என்றார்.கறுப்பு பழுப்புஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசுகையில் ஒரு வெளிநாட்டுச் சிறுகதையைச் சொன்னார்.

“ஒரு நாட்டின் மன்னனுக்கு ஏனோ கறுப்புப் பூனைகளைப் பிடிக்காமல் போய்விடுகிறது. குடிமக்கள் தங்களிடம் உள்ளதைக் கொன்றுவிட ஆணையிடுகிறான் ஒரு மன்னன். எல்லோரும் அப்படியே செய்கிறார்கள். பின்னர் கறுப்பு நாய்களைக் கொல்ல ஆணையிடுகிறான். நாய் வளர்ப்போர் அதிகம் என்பதால், இந்த ஆணையால் மக்கள் சங்கடப்படுகிறார்கள். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்களிடம் கறுப்பு நாய் இருந்தாலும் அது பழுப்பு நாய்தான் என்று சான்று அட்டை பெறுகிறார்கள் மக்கள். பின்னர் மன்னன் பழுப்பு நாய்களையும் கொல்ல ஆணையிடுகிறான். ஏன் இப்படியெல்லாம் மன்னன் செய்கிறான் என்று சிலர் கேட்கிறார்கள். முதலில் கறுப்புப் பூனைகளைக் கொல்ல ஆணையிட்டபோதே இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்ற பதில் வருகிறது. இந்தியாவின் இன்றைய நடப்புகள் இந்தக் கதை போலவே இருக்கின்றன,” என்றார் அவர்.“இன்று போல் முன்னெப்போதுமே மதவெறி கிளப்பப்பட்டதில்லை. படித்த - நடுத்தர வர்க்க மக்களைக் குறிவைத்தே மதவெறி பரப்பப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்களிடம் ஒரு வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதுதான் ‘சொல்’. அந்த ஆயுதத்தோடு உண்மையின் பக்கம் நிற்பவர்கள் மீது ஆதிக்கவாதிகளுக்குக் கோபம் வருகிறது,” என்றார்.சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்புவதிலும் பகையுணர்வை வளர்ப்பதிலும் அரசாங்கமே ஈடுபடுகிறது. இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உணவை உண்ணக்கூடாது என்று கட்டளையிடும் அரசை எந்த நாடும் சகித்துக் கொள்ளாது. இந்தியா சகித்துக்கொள்கிறது. மக்கள் ஒன்றுபட வேண்டும், எதிர்க்க வேண்டும், ஓரணியாய்ப் போராட வேண்டும் என்று கூறிய அவர், “எல்லாக் கல்வி நிலையங்களிலும் இந்த மேடை உருவாக்கப்பட வேண்டும்,” என்றார்.மறுக்கும் உரிமைஇசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, “கர்நாடக இசை எல்லோரிடமும் போக வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அதுதான் பிடிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன். இது எனக்குப் பிடிக்கவில்லை என்று மறுக்கிற உரிமை குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்,” என்றார். கர்நாடக சங்கீதம் மட்டுமே இந்திய இசை என்பது பெரிய வன்முறை. மிகப் பரந்த இந்தியக் கலைகளில் கர்நாடக இசை ஒரு சிறிய புள்ளி, அவ்வளவுதான்.

கர்நாடக சங்கீதத்தைத் தமிழிலும் பாடத்தொடங்கியபோது, அது பற்றி பெரியாரின் கருத்தைக் கேட்டார்கள். தெலுங்கு அல்லது சமஸ்கிருதத்தில் பாடிய பக்திப்பாடல்களை இப்போது தமிழிலும் பாடுகிறீர்கள், அதிலே என்ன வேறுபாடு இருக்கிறது என்று திருப்பிக் கேட்டார் அவர். மக்களுக்குப் புரியும் மொழியில் அவர்களுக்குத் தேவையானது சென்றடைய வேண்டும் என்பதே முக்கியம். கர்நாடக சங்கீதம் பற்றிப் பேசப்படுகிறது என்றால் பறை பற்றியும் பேசப்பட வேண்டும். கர்நாடக சங்கீதம் பாடப்படும் மியூசிக் அகடமியில் கானா பாடலும் ஒலிக்க வேண்டும். அதுதான் இந்தியக் கலாச்சாரம். என்றார் அவர்.இந்தியக் கலாச்சாரத்துக்கு இரண்டாயிரம் வருடப் பெருமை இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், இந்தியா 1947ல் உருவான ஒரு புதிய நாடு என்பதுதான் வரலாறு. அதன் ஒரே விதி அரசமைப்பு சாசனம் மட்டுமே. இது பற்றிய சிந்தனை இல்லாதவர்களிடமும் பேசுகிறவர்களாக இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் கிருஷ்ணா கூறினார்.ஒரே வழி“நீண்ட காலமாக ஒரே ஒருவர் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சியில், மேடையில், மன்கி பாத் நிகழ்ச்சியில், கைப்பேசி ‘ஆப்ஸ்’ வடிவில் என அவருடைய பேச்சுதான். பிரதமர் பேசுகிறார் என்றால் இப்போதெல்லாம் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது,” என்று தனது உரையைத் தொடங்கினார் ‘ஃபிரண்ட்லைன்’ பத்திரிகை ஆசிரியர் விஜயசங்கர்.அதிகார வர்க்கம் காவிமயமாக்கப்பட்டிருக்கிறது. கடவுளையே தட்டிக்கேட்கிற நக்கீரப் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள், அனுசரித்துப் போக விரும்புகிற தருமிப் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள்.

சகோதரத்துவத்தைப் பிரிக்க சிலர் வந்திருக்கிறார்கள் என்பதால், சகோதரத்துவத்தைக் காக்க, சகோதரர்களே என்று விளித்துப் பேசுவது அவசியமாகியிருக்கிறது என்றார் அவர்.மதத்திற்கு இன்னும் ஏதோவொரு தேவை இருக்கிறது. ஆகவேதான் கார்ல் மார்க்ஸ், மதம் நொறுங்கிய மனங்களுக்கு ஆறுதல் என்றார். பிரச்சனையை அது தீர்ப்பதில்லை, ஆனால் வலி மறக்கச் செய்கிற அபினாக இருக்கிறது. ஆகவே அறிவியல் பார்வையை வளர்ப்பது தேவைப்படுகிறது. கல்புர்கி, கவுரி லங்கேஷ் கொலைகளில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஒரே மாதிரி இருப்பதாக தடயவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரே மாதிரியான என்பதில் ஒரு அரசியல் தத்துவம் இருக்கிறது. மக்களைப் பிரிப்பதன்றி அவர்களுக்கு வேறு வழியில்லை, ஒன்று சேர்வதன்றி நமக்கு வேறு வழியில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.கலை நிகழ்வுகள்முன்னதாக கரிசல் குயில் கிருஷ்ணசாமி, கரிசல் குயில் கருணாநிதி ஆகியோர் மதவெறிக்கு எதிரான, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்களைப் பாடினர்.

‘மையம்’ குழுவினரின் தப்பாட்டம் அரங்கத்தை அதிரவைத்தது. தற்போதைய அரசியல் நிலைமைகளுக்குப் பொருத்தமாகப் புதுப்பிக்கப்பட்டு, பிரளயன் இயக்கத்தில் சென்னை கலைக்குழுவினர் வழங்கிய ‘இடம்’ நாடகம், இந்த மேடை புறப்பாட்டிற்கான முன்னறிவிப்பு போல, நாட்டின் பன்முகப் பண்பாட்டுப் பாதுகாப்பைக் கலை வடிவில் வலியுறுத்தியது.ராஜா அண்ணாமலை மன்றம் நிரம்பி வழிய நடைபெற்ற இந்த விழாவில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் பிரிவாக ‘சென்னை மக்கள் மேடை’ அமைப்பும் தொடங்கப்பட்டது. கவிஞர் இரா.தெ. முத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். எம். ராமகிருஷ்ணன் வரவேற்க, ஜி. செல்வா நன்றியுரைத்தார்./

தீக்கதிர்

Comments

  1. மேடை தேவை
    வாங்க பேசலாம்!
    மெளனம் அடக்குமுறைக்கு
    சம்மதம் தெரிவிக்கும் செயல்!
    சொல் பிளவு சக்திகளை விரட்ட
    மக்கள் ஒற்றுமை மேடை தேவை!

    ReplyDelete

Post a Comment