மதம் பற்றி மார்க்சியம்

மதம் பற்றி மார்க்சியம் : 
அருணன் 




1

மாமேதை மார்க்சின் இருநூற்றாண்டு விழாவை யொட்டி அவரது சிலசிந்தனைகளை உரையாடல் வடிவில் முன்வைக்க விழைகிறேன். தமிழகத்தில் தற்போது மதம் ஒரு முக்கிய விவாதப் பொருளாக எழுந்திருப்பதால் அது முதலில் கையாளப்படுகிறது.


மதவாதி: மார்க்சியத்தின் கொள்கை ஆத்திகமா? நாத்திகமா?
மார்க்சியவாதி: நாத்திகம். ஆனால் முரட்டு நாத்திகம் அல்ல; அறிவியல்பூர்வ நாத்திகம். 
மத: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
மா: முன்னது, கடவுள் இல்லை எனும் அறிவிப்போடு நின்று விடும். பின்னது, இல்லாத கடவுள் மக்கள் மனதில் மட்டும் ஏன் இருக்கிறார் என்பதையும் ஆராயும். கடவுள் நம்பிக்கை எப்போது தோன்றியது, எப்படி நிலைநிறுத்தப்பட்டது, என்று மறையும் என்பதையும் எடுத்துச் சொல்லும். 
மத:கடவுள் இல்லை என்று எதை வைத்துச் சொல்லுகிறாய்?
மா: கடவுள் உண்டு என்று எதை வைத்துச் சொல்லுகிறாய்?
மத: எனக்கு தாய் இருப்பதுபோல இந்த உலகிற்கு ஒரு தாய் இருக்கும் அல்லவா, அதுதான் கடவுள்.
மா: உமக்கு தந்தை உண்டே, உலகிற்கு யார்?
மத: அதனால்தான் இந்து மதம் சக்தியோடு சிவன் பற்றியும் பேசுகிறது.
மா: அப்படியெனில் கடவுள் ஒருவரா இருவரா?
மத: உலகைப் படைக்கவே இருவர். உண்மையில் அவர் ஒருவரே.
மா: இது என்ன குழப்பம்? மனிதர்களைப்போல அவரும் ஆண்பால் பெண்பால் என இரண்டாக பிரிந்தால்தான் படைப்புத் தொழிலில் இறங்க முடியும் என்றால் அவர் எப்படி கடவுள் ஆவார்? அவர் மனிதராகிப் போவார்!
மத: ம்ம்ம்...எப்படியோ இருந்துவிட்டுப் போகிறார். நான் இருக்கிறேன் என்றால் என்னை பெற்றவர் உண்டு என்பது போல இந்த உலகம் உண்டு என்றால் கடவுள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டுதானே ஆக வேண்டும். 
மா: நல்லது. உலகம் உண்டு என்பதால் கடவுள் உண்டு என்றால், கடவுள் உண்டு என்பதால் அவரை படைத்த இன்னொரு கடவுள் இருக்க வேண்டும் அல்லவா, அவர் யார்?
மத: ஆஹா, என்னைக் குழப்ப பார்க்கிறாய். கடவுளுக்கு மேலே யாரும் இல்லை.
மா: அப்படியெனில் இந்த உலகிற்கு மேலே, இந்த பிரபஞ்சத்திற்கு மேலே யாரும் இல்லை என்கிற முடிவுக்கு நானும் வரலாம் அல்லவா?
மத: ம்ம்ம்..வரலாம்தான்.கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை.
மா: ஆக உனது கடவுள் உனது நம்பிக்கையில்தான் வாழ்கிறாரே தவிர யதார்த்தத்தில் இல்லை. இருக்க முடியாது. எந்தவொன்றின் இருப்புக்கும் வெளி எனும் பௌதீகம் வேண்டும். வெளி என்றால் சடப்பொருள். சடப்பொருள் என்றால் வெளி. உமது கடவுளோ அந்த வெளியையே,இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர் என்கிறாய்.அப்படி வெளிக்கு அப்பாற்பட்டவருக்கு இருப்பு இருக்க முடியாது. ஆகவே அவர் இல்லை. இல்லாதவரால் அந்த வெளியை, இந்த பிரபஞ்சத்தை படைத்திருக்கவும் முடியாது.
மத: உனது வில்லங்கமான வாதங்களால் எனது கடவுள் நம்பிக்கையை அசைக்க முடியாது. கடவுள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவர்.
மா: விஷயம் தீர்ந்தது. கடவுளின் இருப்பை பகுத்தறிவால் நிரூபிக்க முடியாது என்று ஒப்புக்கொண்டு விட்டாய். அது உனது நம்பிக்கை சார்ந்தது என்றால் அது உன்பாடு, எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கடவுளின் இருப்பை நிரூபிக்கிறேன் என்று கிளம்பாதே. 
மத: நம்பிக்கை சார்ந்ததை நிரூபிக்க வேண்டியதில்லை என்கிறேன்.
மா: நிரூபிக்க முடியாது என்பதால்தான் இப்படிச் சொல்கிறாய் என்கிறேன். 
மத: எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள். ஆனால் என்னைப் போன்ற ஆத்திகர்கள்தாம் ஆகப் பெரும்பாலோர் என்பதை மறந்திடாதே.
மா: அதையும் பேசவேண்டும் என்பதால்தான் மார்க்சியம் விஞ்ஞானபூர்வமானது.

(இன்னும் பேசுவார்கள்) 




2




மத: மார்க்சியத்தின் கொள்கை நாத்திகம் என்றாயே, அப்படி மார்க்ஸ் கூறியிருக்கிறாரா?
மா: மார்க்ஸ் தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது டெமாக்ரிடஸ், எபிகூரஸ் எனும் கிரேக்க நாத்திகர்களை. 1841ல் 
வெளிவந்தது லுட்விக் பாயர்பாக்கின் “கிறிஸ்தவத்தின் சாரம்“ எனும் நூல். கடவுள் மறுப்பு நோக்கில் கிறிஸ்தவத்தை அலசிய 
அந்த நூலை பெரிதும் ரசித்தார் மார்க்ஸ். பிற்காலத்தில் அதையும் தாண்டி இன்னும் ஆழமாக அலசினார் மதத்தின் சாரத்தை. ஹெகலின் தர்க்கவியலை ஏற்றவர் அவரின் ஆத்திகத்தை நிராகரித்தார். சிந்தனைத் துறையில் மார்க்சின் மறுபாதியாக விளங்கிய எங்கெல்ஸ் 1886ல் எழுதியது “லுட்விக் பாயர்பாக்கும் சாஸ்திரிய ஜெர்மா       னிய தத்துவத்தின் முடிவும்“ என்பது. “கடவுள் உலகைப் படைத்தாரா அல்லது உலகமானது நித்தியமாக உள்ளதா? இந்த கேள்விக்கு தத்துவஞானிகள் கொடுத்த பதில் அவர்களை இருபெரும் முகாம்களாக பிரித்தது” என்று அதில் குறிப்பிட்டார். அதில் தங்கள் இருவரையும் நாத்திக முகாமில் இருத்தினார். 
மத: சரி. மார்க்சும் எங்கெல்சும் 170 ஆண்டுகளுக்கு முன்பே நாத்திகம் பேசியும் ஆத்திகம்தானேஇன்னும் ஓங்கி நிற்கிறது! இதிலிருந்து கடவுளின் மகிமை புரிகிறதல்லவா?
மா:  இந்த இருவரின் காலத்திலிருந்து அல்ல அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாத்திகம் பேசப்பட்டு வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்திய கிரேக்க ஞானிகள் பற்றி சொன்னேன். பாரதத்திலும் லோகாயதவாதிகள், சார்வாகர்கள் , பூதவாதிகள் எனப்பட்ட கடவுள் மறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள் பற்றி நமது மணிமேகலை, நீலகேசியில் விபரங்கள் உள்ளன. இப்போதும் சீனா ரஷ்யாவிலும் ஐரோப்பாவின் பலநாடுகளிலும் நாத்திகர்கள்கணிசமாக இருக்கிறார்கள். இந்தியாவிலும் மார்க்சியர்கள், பெரியாரியர்கள் என்று நாத்திகர்கள் இருக்கிறோம். உன்னை ஒன்று கேட்கிறேன்.கடவுள் எல்லாம் அறிந்தவர்தானே? எல்லாம் வல்லவர்தானே?
மத: நிச்சயமாய். அதிலென்ன சந்தேகம்?  இல்லையெனில் அவர் எப்படி கடவுள் ஆவார்?
மா:  அப்படியெனில் ஏன் இவ்வளவு காலமாய் தன்னை நம்பாதவர்களை விட்டு வைத்திருக்கிறார்? அவர்கள் மனசுக்குள்ளும் புகுந்து அவர்களையும் தன் மீது நம்பிக்கை கொண்டவர்களாக ஏன் மாற்றவில்லை?
மத: அப்படிப்பட்டவர்களும் இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்திருக்கலாம்.
மா: நாத்திகமும் கடவுளின் அனுக்கிரகம்தான் என்றால் ஏன் அந்தக்காலம் முதல் இந்தக்காலம்வரை அதை ஒழிக்க இந்தப் பாடுபடுகிறீர்கள்? ஆத்திகம் ஓங்கி நிற்கிறது என்று ஏன் இப்போதும் இறுமாப்பு கொள்கிறீர்கள்?  ஆத்திகமும் நாத்திகமும் அக்கப்பக்கமாக இருக்கட்டுமே.
மத: நியாயமான பேச்சுதான்.  ஆனால்..?
மா: என்ன ஆனால்? அப்படி அக்கம்பக்கமாக, சுதந்திரமாக, சமதையாக இயங்கவிட்டால் ஆத்திகத்தை நாத்திகம் பின்னுக்கு தள்ளிவிடும் என்று பயப்படுகிறீர்கள்.
மத: பயமெல்லாம் இல்லை. எங்கள் பக்கம் கடவுள் இருக்கிறார்.
மா: ஆம் நீங்கள் தனியராக இல்லை, உங்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். ஆனால் நாங்கள் தனியராக இருக்கிறோம். எங்கள் பக்கம் நாங்கள் மட்டுமே இருக்கிறோம். ஆனாலும் பயப்படுகிறீர்கள். அதனால்தான் குழந்தை பருவத்திலேயே கடவுள் நம்பிக்கையை ஊட்டுகிறீர்களே தவிர நாத்திகம்பற்றி சொல்வதில்லை. கல்விகூடங்களிலும் வெகுமக்கள் ஊடகங்களிலும் எங்கள் சிந்தனைக்கு இடமில்லை.இப்படி எங்கள் கால்களை கட்டிபோட்டுவிட்டு பந்தயத்தில் வெற்றிபெற்றிருப்பதாக சொல்லிக் கொள்கிறீர்கள். கால்கட்டை அவிழ்த்துவிட்டுப் பாருங்கள். சமவாய்ப்பு தரப்படும் இடங்களில் நாத்திகம் முந்திக் கொண்டிருக்கிறது.
மத: நீ என்னதான் பொருமினாலும் யதார்த்தம் என்னவோ ஆத்திகர்களே ஆகப்பெரும்பாலோர் என்பது. அதற்கு காரணம் கடவுள்நம்பிக்கை யாராலோ திணிக்கப்பட்டது என்றே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? மக்களின் விருப்பம் இதில் ஏதும்  இல்லையா?
மா: நியாயமான கேள்வி. இதற்கு கடவுள் நம்பிக்கையின் தோற்றுவாய்க்குள் போக வேண்டும்.

(இன்னும் பேசுவார்கள்) 




3




மத: கடவுள் நம்பிக்கையின் தோற்றுவாய் பற்றி பேச வேண்டும் என்கிறாயே, அதில் பேச என்ன இருக்கறது? மனிதன் பிறக்கும் போதே அது கூடவருவது. 
மா: குழந்தை பிறந்தவுடன் சாமியா கும்பிடுகிறது? அது பாவம் பாதுகாப்பான கருவறையைவிட்டு எங்கோ வந்திருக்கிறோமே என்று பயத்தில் அலறுகிறது. பிறக்கும்போது மனிதன் எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் பிறக்கிறான். 
மத: பிறந்தவுடன் சாமி கும்பிடாமல் இருக்கலாம். ஆனால் அதற்குள் கடவுள் இருப்பார்.
மா: எனது ஐந்து வயது பேத்திக்கும் எனது மனைவிக்கும் நடந்த இந்த உரையாடலைக் கேள்: “அம்மம்மா, உன் அப்பா அம்மா எல்லாம் எங்கே? அவங்கெல்லாம் செத்து போயிட்டாங்க. அப்படீன்னா? ம்ம்..சாமி கிட்ட போயிட்டாங்க. சாமின்னா? அவருதான் நம்மையெல்லாம் இங்க அனுப்பினவரு. பிறகு ஏன் கூப்பட்டுகிட்டாரு? வயசாயிருச்சில்ல. சாமி மோசம். அம்மம்மா உனக்கும் எனக்கும் வயசே ஆக வேணாம். இப்படியே இருப்போம்“. இதைக் கேட்ட நான்அசந்து போனேன். இதுதான் குழந்தை நிலை. இப்படித்தான் முழு மனித சமூகமும் ஆதி நாளில் இருந்தது. 
மத: மனித சமூகம் தோன்றியபோதே கடவுள்-மத நம்பிக்கையெல்லாம் தோன்றவில்லை என்கிறாயா? என்னால் நம்ப முடியவில்லை.
மா: என்னை நம்ப வேண்டாம். வரலாற்றாளர்களை நம்பு. ஆதிமனிதர்களின் கல்லறைகளை ஆய்வு செய்தவர்கள் சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கடவுள்- மத நம்பிக்கை இருந்ததற்கான அடையாளங்கள் ஏதுமில்லை, அதற்கு பிந்திய காலத்து கல்லறைகளில்தான் அப்படி அடையாளங்கள் உள்ளன என்கிறார்கள்.
மத: அவை எத்தகைய அடையாளங்கள்?
மா: மரணத்திற்குப் பிறகும் ஏதோ ஒருவித வாழ்வு உண்டு எனும் நம்பிக்கையின் அடையாளங்கள். அதற்காக சில பொருட்கள் இறந்தவரோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தன. 
மத: பார்த்தாயா? அந்தக் காலத்திலேயே ஆன்மா நம்பிக்கை இருந்திருக்கிறது. 
மா: ஆம். அதுதான் கடவுள் நம்பிக்கைக்கும் அவனை இட்டுச் சென்றது.
மத: அது எப்படி?
மா: மரணத்தில் உடலை விட்டு உயிர்-ஆன்மா- தனித்து வேறொரு உலகிற்கு செல்கிறது, இங்கு மனிதர்களுக்கு தலைவன் இருப்பது போல அங்கு ஆன்மாக்களுக்கு ஒரு தலைவர் இருப்பார், அவர்தான் கடவுள் என்று சொல்லத்தொடங்கினார்கள். 
மத: நமது முன்னோர்கள் இதைத்தான் ஜீவாத்மாக்கள், பரமாத்மா என்று கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். எனது வழிக்கு வருகிறாய். 
மா: ஒன்றை கவனி. மரணம் பற்றிய ஞானம் இல்லாத அல்லது மரணத்தை விரும்பாத மனிதர்கள்செய்த கற்பிதம்தான் ஜீவாத்மாக்கள்,பரமாத்மா என்பதும் இதில் வெளிப்படுகிறது.
மத: என்ன சொல்கிறாய்? மரணத்திற்குப் பிறகு உயிர் ஆன்மாவாக இருக்காதா?
மா: மரணம் என்பது உடலின் இயங்குநிலை முடிந்து போவது. உயிர் என்பது அந்த இயங்கு நிலைக்கான பெயர். மரணம் என்பது உயிரின் முடிவு. உடல் இல்லாமல் உயிரே கிடையாது. பிறகு எப்படி அது தனித்து இருக்கும்? ஆன்மாவின் தனித்த இருப்பை அறிவியல்பூர்வமாக இதுவரை யாரும் நிரூபித்ததில்லை. 
மத: உனது அறிவியலை நீ வைத்துக்கொள்.எனது நம்பிக்கையை நான் வைத்துக் கொள்கிறேன். மரணத்திற்குப் பிறகும் எனது ஆன்மா இருக்கும், அது ஒருவித வாழ்வை நடத்தும் என்பதுதான் எனக்கு நிம்மதியைத் தருகிறது.அதை நான் இழக்க மாட்டேன்.
மா: இதுதான் விஷயம். இந்த நிம்மதியை வேண்டித்தான் ஆத்மாக்கள், பரமாத்மா (கடவுள்) எனும் கற்பிதங்களை உருவாக்கி கொண்டார்கள். அவர்களின் இந்த குழந்தைத்தனத்தை மார்க்சியர்களாகிய நாங்கள் ஏற்கவில்லை என்றாலும் புரிந்து கொள்கிறோம், அவர்களை அனுதாபத்தோடே நோக்குகிறோம். 

(இன்னும் பேசுவார்கள்) 




4




மத: உனது அனுதாபம் எங்களுக்கு தேவையில்லை. கடவுள்-மத நம்பிக்கையோடுதான் உலகம் நடைபோட்டு வந்திருக்கிறது, இன்றைய நிலையை எட்டியிருக்கிறது.
மா: அது உண்மைதான். அதற்குக் காரணம் கடவுள் என்பது மனிதனின் தயாரிப்பாக இருப்பதுதான். அது தனக்கு பயன்படுகிறது என்று  நினைக்கும்வரை அவனிடம் கடவுள் நம்பிக்கை இருக்கும்.
மத: நீ கடவுளை இளக்காரமாகப் பார்க்கிறாய்.
மா: இல்லை, உண்மையைச் சொல்கிறேன். கடவுளைப்பற்றிய சித்தரிப்பை யோசி. தனது ஆசைகளை எல்லாம் கடவுளின் மீது சாத்தியிருக்கிறான் மனிதன். எல்லாம் வல்லவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர், கருணைக்கடல், அவரது பாதாரவிந்தமாகிய பரலோகம் இகலோகத்தின் அரிதான விஷயங்களை எல்லாம் கொண்டதாக உள்ளது.
மத:பரலோகம் மனிதனுடைய ஆசைகளின் பிரதிபலிப்பு என்றால் நரகலோகம் அவனது துயரங்களின் பிரதிபலிப்பா?
மா: நிச்சயமாக. கடவுளின் எதிர்பிம்பம்தான் சாத்தான் /சைத்தான் /பிசாசு என்பது. சொர்க்கலோகத்தின் எதிர்பிம்பம்தான் நரகலோகம்.
மத: கடவுளிடம் நீ மனிதனை நிறுத்துகிறாய்.
மா: நான் நிறுத்தவில்லை. மனிதகுலம் ஏற்கெனவே நிறுத்தியிருக்கிறது.அதனால்தான் 1845ல் தான் எழுதிய புகழ்பெற்ற “பாயர்பாக் சூத்திரங்க”ளில் மார்க்ஸ் கூறினார்: “புனிதக் குடும்பத்தின் ரகசியம் பூலோகக் குடும்பத்தில் உள்ளது”. அதாவது பிதா-குமாரன்-பரிசுத்த ஆவி எனும் கிறிஸ்தவத்தின் புனிதக் குடும்பம் எனப்பட்டதும், அதன் அதிகாரகட்டமைப்பும், வழிபாட்டு முறைமை களும் அன்றைய ஐரோப்பிய சமூககட்டமைப்பை பிரதிபலிப்பதாக இருந்தது. அதனால்தான் அது எடுபட்டது என்றார்.
மத: அப்படியெனில் கடவுள்-மதத்தை எல்லாம் இகழக்கூடாது அல்லவா?
மா: இகழும் வேலையை மார்க்சியர்கள் செய்வதில்லை. ஆனால் கடவுள் எனும் கருத்தியல் மனிதனின் கண்டுபிடிப்பே என்பதையும் அவர்கள் மறப்பதில்லை. இங்கு ஆகம கோயில்கள் அப்படியே இங்கிருந்த வருணமுறையைத்தானே பிரதிபலித்தன. கருவறைக்குள் பிராமணர்கள், அர்த்த மண்டபத்திற்குள் ஷத்திரிய-வைசியர்கள், மகாமண்டபத்திற்குள் சூத்திரர்கள்,கோயிலுக்கு  வெளியே பஞ்சமர்கள் என்று அன்றைய வர்க்க கட்டமைப்பத்தானே கச்சிதமாகக் கொண்டிருந்தன!
மத:கடவுள்-மதம் பற்றிய புனிதங்களை வெட்டப் பார்க்கிறாய்.
மா: புனிதங்களை விலக்கி சத்தியத்தை தரிசிக்க பார்க்கிறோம்.”மதத்தின்சாரத்தை மனிதசாரத்தில் கண்டார் பாயர்பாக். ஆனால் மனித சாரமானது சமூக உறவுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை காணத் தவறினார். இந்த மெய்யான சாரத்தை விமர்சிப்பதற்குள் அவர் நுழையவில்லை” என்றார் மார்க்ஸ். இதுதான் மதம்பற்றிய மார்க்சியத்தின் ஒட்டுமொத்த பிழிவு. இதன்அர்த்தம் கடவுள் பற்றிய  விமர்சனம் மதம் பற்றிய விமர்சனமாக மட்டுமல்லாது சமூகம் பற்றிய விமர்சன மாகவும் இருக்க வேண்டும் என்பது. இதில்தான் மார்க்சிய நாத்திகம் இதரவகை நாத்திகங்களிலிருந்து தனித்துவமாக விளங்குகிறது.

(இன்னும் பேசுவார்கள்)




5

மத: கடவுள்-மதத்தை கொண்டு போய் உங்கள் மார்க்ஸ் சமூக உறவுகளோடு வம்பாக இணைக்கிறார். அது தனித்த அனுபூதி நிலை.
மா: தனித்த அனுபூதிநிலை என்றால் ஏன் ஆத்திகர்கள் தனித்தனி மதமாக குவிந்து நிற்கிறார்கள்? தாங்கள் இந்தமதம் அவர்கள் அந்தமதம் என்று ஏன் பிரித்துப் பேசுகிறார்கள்?
மத:அது அப்படித்தான் இருக்க முடியும். ஒரு மதத்திற்குள் தனித்த அனுபூதி நிலை.
மா: ஆக ஒரு குழு வாழ்வு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறாய். யோசித்துப்பார்த்தாயா? ஜீவாத்மாக்களுக்கெல்லாம் பரமாத்மா ஒருவர்தான் என்றால் ஏன் இத்தனை கடவுள்கள், இத்தனை மதங்கள்? எல்லாம்வல்ல கடவுளால் தனது நம்பிக்கையாளர்களை எல்லாம் ஏன் ஒரேமதத்தில் ஒன்றுதிரட்ட முடியவில்லை?
மத:அதற்கு கடவுளை குற்றம் சொல்லக் கூடாது. இந்த மனிதர்கள்தாம் இப்படி விதவிதமான மதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
மா: ஆஹா நீயே இப்போது கடவுளின் இடத்தில் மனிதர்களை நிறுத்திவிட்டாய். இதைதான் நாங்களும் சொல்கிறோம். கடவுள்-மதம் என்பதெல்லாம் காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டன, நிலைநிறுத்தப்பட்டன.
மத:இருக்கட்டும். ஆனை?ல் அனைத்தும் அந்த ஏகபரம்பொருள் எனும் சமுத்திரத்தை நோக்கி ஓடும் நதிகளே.
மா: இத்தகைய சொற்களில்தான் மதவாதிகளின் சமாளிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் காலந்தோறும் இந்த நதிகள்-இந்த மதங்கள்-ஏன் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டன? இப்போதும் ஏன் மோதிக் கொள்கின்றன?
மத: அப்படி என்ன மோதல்? ஆட்சியாளர்கள்தாம் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோதிக் கொண்டார்கள்.
மா: 2400 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரடீசுக்கு மரணதண்டனை தரப்பட்டதே அது அரசாங்ககடவுள்களுக்கு பதிலாக அவர் புதியகடவுள்களை முன்வைத்ததால்தான். அப்படி துவங்கிய மதமோதல்கள் இன்று வரை தொடர்கின்றன. இடைக்காலத்தில் 200 ஆண்டுகள் விட்டுவிட்டு கொடூரமான சிலுவையுத்தங்கள் நடந்தன கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் பெயரால். அப்புறம் இஸ்லாமிற்குள் சன்னி -ஷியா என்றும், கிறிஸ்தவத்திற்குள் கத்தோலிக்கம்-புராட்டஸ்டென்ட் என்றும் கடும் சச்சரவுகள் எழுந்தன.
மத: அந்த மதங்கள் அப்படித்தான். நமது பாரதீய மதங்கள் அப்படியல்ல. இவை அன்புமயமானவை.
மா: நீயாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். இங்கும் சமண-புத்த-பிராமணிய மதங்களுக்கிடையே கடும் மோதல்கள் நடந்தன. சமண-புத்தத்தின் வீழ்ச்சிக்கு பிறகு பிராமணிய மதத்திற்குள் சைவ- வைணவ மோதல் கிளம்பியது.
மத: இருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் மதவெறியர்கள்தானே தவிர கடவுள் அல்ல.
மா: எப்படியாகிலும் கடவுளை காப்பாற்றி விடுகிறாய். நல்லது. நானும் உன் வழிக்கே வருகிறேன். மத மோதல்களுக்கு காரணம் மனிதர்களே என்றால் ஏன் மனிதர்கள் அப்படி வெறி கொள்கிறார்கள்? அதற்கு அந்தந்த காலத்து சமூகக் கட்டமைப்புதான், அதை ஆதிக்கம் செலுத்துவோர்தானே காரணமாக இருக்க வேண்டும்?
மத: ம்ம்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.
மா: ஆம். இல்லையென்றால் உன் கடவுள் காரணமாகிப் போவார், பார்த்துக்கொள்.
மத: நீ எப்படிப் பேசினாலும் எனது கடவுள் நம்பிக்கையை உன்னால் அசைக்க முடியாது.
மா: வேண்டாம், அதை நீ வைத்துக்கொள். ஆனால் மத விவகாரங்களுக்கும் சமூகக் கட்டமைப்பே காரணம் என்று ஒப்புக் கொண்டாயே அது போதும் எனக்கு. இதைத்தான் மார்க்சும் வேறு வார்த்தைகளில் கூறினார்.
மத: சமூகக் காரணத்தை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தனிமனித உளவியலும் ஒரு காரணமாக இருக்கும்
மா: இருக்கும். ஆனால் அடிப்படைகாரணம் சமூகக்கட்டமைப்பே. ஆதிமனிதன்யுகத்தில் உருவான கடவுள்-மத நம்பிக்கை ஆண்டான், நிலப்பிரபு யுகங்களில் நிறுவனமயமாகி நிலைபெற்றது. முதலாளி யுகத்திலும் தொடர்கிறது.
மத: கடவுள்-மதத்தால் ஆளும் வர்க்கங்களுக்கே ஆதாயம் என்பது போலப் பேசுகிறாய். ஆளப்பட்ட வர்க்கங்களுக்கு அதில் நன்மையே இல்லையா?
மா: நியாயமான கேள்வி. அது பற்றியும் விவாதிக்கிறது மார்க்சியம்.

(இன்னும் பேசுவார்கள்)




6




மத: பகுத்தறிவாளர்கள் எனப்பட்டோர் மதங்களை மோசடி பேர்வழிகளின் ஏற்பாடுகள் என்றுதான் திட்டுகிறார்கள். நீங்களும் அப்படித்தானா?
மா: இல்லை. நாங்கள் அப்படியல்ல. எங்கெல்ஸ் 1882ல் எழுதியது “புரூனோ பவ்வரும் துவக்ககாலக் கிறிஸ்தவமும்“ என்பது. அதில் கூறினார்: “கிறிஸ்தவம் உள்ளிட்ட சகலமதங்களும் ஏமாற்று பேர்வழிகளின் ஏற்பாடு எனும் கருத்தோட்டமே மத்திய காலத்தின் சுதந்திரச் சிந்தனையாளர்கள் முதல் 18ம் நூற்றாண்டின் புத்தொளி இயக்கத்தவர்கள் வரை நிலவியது. அது இனியும் எடுபடாது”.
மத: அட பரவாயில்லையே! அப்படியெனில் மதங்களின் தோற்றம் பற்றி அவரின் பார்வை என்ன?
மா: “பொருள்சார்ந்த முக்தி கிடைக்காது ஏமாந்துபோயிருந்தவர்கள் அனைத்து வர்க்கங்களிலும் இருந்தார்கள். மனம் சாரந்த முக்தியாவது கிடைக்காதா என்று அவர்கள் ஏங்கினார்கள்...பொதுவாக பொருளாதார, அரசியல், அறிவுசார், ஒழுக்கம்சார் துறைகளில் சரிவு ஏற்பட்டிருந்த சூழலில்தான் கிறிஸ்தவம் எழுந்தது” என்றார் அவர்.
மத: ஆக மதங்களின் தோற்றத்திற்கு புற-அகச் சூழலே அடிப்படைக் காரணமாக  இருந்திருக்கிறது.
மா: ஆம் ஒவ்வொரு மதத்தின் தோற்றத்திற்கும் பொதுவாக வெகுமக்களின் ஆவலாதியே காரணமாக இருந்தது. ஆனால் அப்படி தோன்றிய மதம் விரைவிலேயே ஓர் ஆளும்வர்க்கத்தின் ஆளுகைக்குள் போனது என்பதும் உண்மை. அதனால்தான் அதனினும் புதியதொரு மதமும் வந்தது. இதே கிறிஸ்தவத்திலிருந்து புராட்டஸ்டன்ட் மதம் வந்தது அதைத்தான் உணர்த்தியது.விரைவிலேயே அது புதிய ஆளும்வர்க்கமாம் முதலாளிகளின் ஆளுகைக்குள் வரவும் செய்தது.
மத: நீ என்ன சொல்கிறாய்? அனைத்து வர்க்கங்களின் ஆன்மிக வெளிப்பாடாகத் தோன்றும் மதம் பின்னர் ஓர் ஆளும் வர்க்கத்தின் கருவியாக மாறி விடுகிறது என்கிறாய். இதை ஆளப்படும் வர்க்கங்கள் உணராமலா போய்விடும்?
மா: அவ்வளவு எளிதில் உணர்வதில்லை. கடவுள் நம்பிக்கையிலிருந்து பழக்கதோஷம்வரை, பல்வேறு சடங்குகளிலிருந்து மூடநம்பிக்கைகள்வரை அதற்கு காரணங்களாக  இருக்கலாம். அரசியல் மாற்றத்தைவிட மத மாற்றம் மிகவும் மெதுவாகவே நடக்கிறது.
மத: மதத்தின் ஆற்றலை இப்படியாக ஒப்புக்கொள்கிறாய். ஆனால் உங்களது மார்க்ஸ்தானே அதை மக்களின் அபின் என்று சொன்னது.
மா: என்னடா இன்னும் அதைச் சொல்லவில்லையே என்று பார்த்தேன்! 1844ல் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்த வாசகம் வருகிறது. அந்தப் பகுதியை முழவதுமாய்க்  கேள்: “மனிதன் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்கவில்லை. தன்னை இன்னும்அறியாத அல்லது ஏற்கெனவே தன்னை தொலைத்துவிட்ட மனிதனின் சுயஉணர்வே, சுயபுகழ்ச்சியே மதம். அது ஒடுக்கப்பட்ட ஜிவராசியின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், உயிர்ப்பற்ற சூழல்களின் உயிர்ப்பு. அது மக்களின் அபின்.”
மத: அட, அந்த வாசகத்திற்கு முன்பு இவ்வளவு இலக்கிய அழகுள்ள வார்த்தைகள் உண்டா?
மா:ஆம். மார்க்ஸ் கவித்துவமிக்க ஞானி. அவரது மகா வாக்கியங்கள் பலவும் கவிதைகளே.
மத: ஆனாலும் மதத்தை அபின் எனச் சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை.
மா:மதமானது மனிதனுக்கு ஒரு செயற்கையான போதையை, போலியான திருப்தியைத் தருகிறது என்கிற அர்த்தத்தில்தான் அப்படிச் சொன்னார். தனது நிறைவேறாத ஏக்கங்களை எல்லாம் மதத்தில் ஏற்றியிருக்கிறான் மனிதன் என்பதைச் சொல்லியே இதைச் சொன்னார் என்பதையும் கவனி.

(இன்னும் பேசுவார்கள்)





7





மத:  இதயமற்ற உலகின் இதயம் என்று சொல்லிவிட்டு மதத்தை அபின் எனச்சொன்னது முரண் இல்லையா?
மா: நிச்சயம் இல்லை. சுரண்டல் சமுதாயத்தில் சக மனிதர்களை நம்ப முடியாத நிலையில் மதத்திடம் ஒருவித ஆறுதலைக் காண்கிறான் மனிதன். தனது துயரங்களை அதனுடன் பகிர்ந்து கொள்கிறான், அதில் அகவயமாக ஒருவித நிம்மதி காண்கிறான். ஆனால் புறவயமாக அதனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. அப்படி ஏதேனும் கிடைத்தால் அது தற்செயலானதே. கொள்ளைக்காரனும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறான் தனது கொள்ளை தடங்கலின்றி நடக்க வேண்டும் என்று. வீட்டுக்காரனும் வேண்டிக்கொள்கிறான் தனதுசெல்வம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று! கடவுள் யாருக்கு கிருபைசெய்வார்?வெற்றி பெற்றவன் கடவுளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறான், தோற்றுபோனவன் கடவுள் தன்னை சோதிக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறான். இருவருமே கடவுளைக் குறைகூறுவதில்லை. இருவருக்கும் திருப்திதரும் இந்தஏற்பாடு அகத்தில் சாந்தியையும் புறத்தில் மாயையையும் கொண்டிருக்கிறது. இதைத்தான்  மார்க்ஸ் சுட்டினார்.
மத: அப்படியே இருந்தாலும் இதனால் என்ன மோசம் வந்துவிட்டது மனிதகுலத்திற்கு?
மா: ஏற்கெனவே சொன்னதுபோல காலந்தோறும் மதங்களின் பெயரால் மோதல்கள்  நடந்தன. மதம் உருவாக்கிய மாயாலோகத்தை நம்பி இகலோகத்தில் தான் எடுக்க வேண்டிய முன்முயற்சிகளை எடுக்கத் தவறினான் மனிதன். பொய்ச்சடங்குகளிலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி அறிவியல் சிந்தனையை கைக்கொள்வதில் பெரும் சிரமப்பட்டான்.
மத:  இது அநியாயக் குற்றச்சாட்டு. இன்றைக்கு மனிதகுலம் எட்டியிருக்கும் விஞ்ஞான சாதனைகள் பிறகு எப்படி எட்டப்பட்டன?
மா: மதப்பிடியிலிருந்து ஓரளவுவிடுபட்ட சிலதனிமனிதர்களால்தான் அறிவியல்கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டன. எந்த மதபீடமாவது, அதன் தலைவராவது எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பையாவது செய்ததுண்டா? நீ புகழ்கிற பாரதீய மதங்களின் தலைவர்களாவது அதைச் செய்ததுண்டா? பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று கண்டுபிடித்தார் சங்கராச்சாரியார், புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தார் ஜீயர், சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்தார் சைவமடாதிபதி என்று உன்னால் கூற முடியுமா?
மத: போப்பாண்டவரும்தான் அப்படி எதையும் கண்டுபிடிக்கவில்லை.
மா: ஆம், அதைத்தான் நானும் சொல்கிறேன். கண்டுபிடிக்காதது மட்டுமல்ல கண்டுபிடித்த விஞ்ஞானிகளை, கலிலியோ போன்றவர்களை மோசமாக நடத்தினார்கள். மதபீடங்களின் ஒடுக்குமுறைகளையும் மீறித்தான் அறிவியலாளர்கள் இந்த அதிசயங்களை மனிதகுலத்திற்கு நல்கினார்கள். சரியாக சொல்வதென்றால் மதச்சிந்தனையால் அல்ல, அதிலிருந்து ஓரளவாகிலும் சிலர் விடுபட்டதால்தான் மனிதகுலம் அறிவியல்துறையில் மகத்தானசாதனைகளை செய்தது.அனைவரும் முழுமையாக விடுபட்டால் இன்னும்எவ்வளவு சாதனைகளை செய்யமுடியும் என்று யோசித்துபார்.
மத:  மதத்தால் பவுதீகரீதியாக எந்தப் பயனும் இல்லை என்கிறாயா?
மா: கலைகளுக்கும் இலக்கியத்திற்கும் பயன்கிட்டியது.ஆனால் அவையும் மதம்சார்ந்தே இருந்தன. கலைஞர்களும் இலக்கியவாதிகளாம் அதனால் கட்டிப்போடப் பட்டிருந்தார்கள். இந்த நவீன யுகத்தில்தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு மதச்சார்பற்ற படைப்புகளில் இறங்கினார்கள்.
மத:  நீ என்னதான் சொன்னாலும் மதம் இல்லா சமுதாயம் ஒழுக்கங் கெட்டதாக இருக்கும் அல்லது வெறுமையானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது.
மா: ஆஹா, மதத்திற்கு மாற்று இல்லை எனச் சொல்வது அதற்கும் முடிவு வரலாம் எனும் உனது அச்சத்தை உள்ளடக்கி இருக்கிறது.

(இன்னும் பேசுவார்கள்)






8





மத: நான் சொன்னதற்கு இது பதில் இல்லையே!
மா:  மதம் இல்லையென்றால் ஒழுக்கம் போய்விடும் என்றாய். இப்போது மட்டும் என்ன ஒழுக்கம் வாழ்கிறது. இந்தியாவில் ஆத்திகர்கள் அதிகமா, நாத்திகர்கள் அதிகமா?
மத: சந்தேகம் என்ன? ஆத்திகர்கள்தாம் மிகமிக அதிகம், நாத்திகர்கள் மிக மிகக் குறைவு.
மா:  தண்டனை பெற்று சிறையில் இருக்கிற கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், வல்லுறவாளர்கள், ஊழல்பேர்வழிகள், இதர கிரிமினல்கள் எல்லாம் ஆத்திகர்களா, நாத்திகர்களா?
மத: ம்ம்.. ஆத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும்.
மா:  மதம் எங்கே ஒழுங்கை வளர்த்திருக்கிறது?
மத: மதம் இல்லாவிட்டால் குற்றங்கள் இன்னும் அதிகமாகும்.
மா:  இதற்கு மேல் அதிகமாக என்ன இருக்கிறது? ஒழுக்கத்தை காப்பது மதம்தான் என்றால் ஏன் சட்டம், காவல்துறை, நீதிமன்றம், சிறைச்சாலை என்றிருக்கிறது. கடவுளுக்கு பயந்து அல்ல ஜெயிலுக்கு பயந்து குற்றம் செய்யாதவர்கள்தாம் மிகமிக அதிகம்.
மத: கடவுள் பயமும் ஒரு காரணம்தான்.
மா:  அந்த பயமெல்லாம் படுவேகமாக குறைந்து வருகிறது. அடிக்கிற கொள்ளையில் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு காணிக்கையாக போட்டால் எல்லாம் சரியாகப் போகும் என்று நினைப்பவர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். காசிக்குபோய் கங்கையில் மூழ்கினால் செய்தபாவமெல்லாம் தீர்ந்துபோகும் என்று உங்கள் மதத் தலைவர்கள் குறுக்கு வழி வேறு காட்டியிருக்கிறார்கள்.
மத: நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு.மதம் இல்லையென்றால் பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், கலகலப்புகள் எல்லாம் இருக்காது. மனிதர்களுக்கு வயிறு மட்டுமல்ல மனசும் இருக்கிறது. அவர்களுக்கு தேவை சாப்பாடு  மட்டுமல்ல ஆட்டம்பாட்டமும்தான்.
மா:  நியாயமான பேச்சு. ஒருகாலத்தில் கோயில்திருவிழா வடிவத்தில் மதம் மட்டும்தான் அவற்றை தந்து வந்தது. இன்றோ சினிமா, டி வி என்று வீட்டு வரவேற்பறைக்கே வந்து விட்டது.
மத: அப்படியும் திருவிழாக்களுக்கும் கூட்டம் கூடத்தானே செய்கிறது?
மா: ஆம். இங்குதான் ஒரு பெரியவேலை நடக்கவேண்டியிருக்கிறது. மதவிழாக்களுக்கு பதிலாக மதச்சார்பற்றவிழாக்கள் வேண்டியிருக்கிறது. அவை மக்கள் விழாக்களாக மாறவேண்டியிருக்கிறது.அது நடக்காதவரை மக்கள் மதவிழாக்களைக் கைவிட மாட்டார்கள்.
மத: வந்தாயா வழிக்கு. இப்போது சொல், பிறகு ஏன் மதத்தை உடனே ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிறாய்?
மா:  நான் எங்கே அப்படிச் சொன்னேன்? தோன்றியதெல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரவேசெய்யும். மதத்தை உருவாக்கியது மனிதனே என்று மார்க்ஸ் சொன்னதைச் சொன்னேன். அப்படியெனில் அந்தமனிதனே அதை முடித்துவைப்பான். மதமானது ஒரு குறிப்பிட்ட சமூகச்சூழலில் உருவானது என்றார்கள் மார்க்சும் எங்கெல்சும். அப்படியெனில் அந்தச்சூழல் மறையாமல் அந்தமதம் மறையாது என்பதுதான் பொருள்.

(இன்னும் பேசுவார்கள்)








9

மத: மதத்தை உருவாக்கிய சூழல் மறையாமல் மதம் மறையாது என்று நீ சொல்கிறாயா அல்லது மார்க்ஸ் சொன்னாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
மா: சரியாப்போச்சு. அதிலும் சந்தேகமா? “புனிதக் குடும்பத்தின் ரகசியம் பூலோகக் குடும்பத்தில் இருக்கிறது” என்று மார்க்ஸ் சொன்னார் என்றேனே அதன் தொடர்ச்சி இதுதான்: “இதைக் கண்டறிந்ததும் செய்ய வேண்டியது பிந்தியதை கருத்தியல்ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் ஒழிப்பதே”.கற்பிதமான மதம் யதார்த்தமான சோகங்களை அஸ்திவாரமாகக் கொண்டிருப்பதால் அவற்றை அகற்றவேண்டும் என்றார். சாக்கடையை அகற்றாமல் கொசுத்தொல்லையை ஒழிக்க முடியாது என்றார். அப்படியாக சமூக-பொருளாதார மாற்றத்திற்கான போராட்டத்திற்கும் சமயம் கடந்த சமுதாய அமைப்புக்கும் இடையில் காத்திரமான தொடர்பு இருக்கிறது என்றார்.
மத: சரிதான். அப்படியென்றால் மதத்தை விமர்சிக்காமல் அதை உருவாக்கிய சமூகச் சூழலையே விமர்சிக்க வேண்டும் என்கிறார். நாத்திகர்கள் எங்கே கேட்கிறீர்கள்? அதைத்தானே விமர்சிக்கிறீர்கள்!
மா: சாக்கடையை அகற்ற வேண்டும் என்பதற்கு கொசுக்கள் பற்றிய விமர்சனம் தான் துவக்கம். மார்க்சியர்கள் சொல்வது அந்த துவக்கத்தோடு நின்றுவிடக் கூடாது என்பதுதான்.
மத: புரியவில்லையே.
மா: மதம்பற்றிய விமர்சனம் அவசியம் தேவை. ஆனால் அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு காரணமான இன்றைய சமூகம்பற்றிய விமர்சனத்திற்குள்ளும் இறங்க வேண்டும், இந்த ஏற்றத்தாழ்வான சமுதாயத்தை ஒழிக்கிற செயல்பாட்டிற்குள்ளும் இறங்க வேண்டும் என்கிறோம். இதரவகை நாத்திகர்கள் மத விமர்சனத்தோடு நின்றுவிடுகிறார்களே அதுதான் தவறு என்கிறோம்.மனிதனின் வாழ்வில் பௌதீகரீதியான மாற்றம் வராமல் சிந்தனைரீதியான மாற்றம் பரந்த அளவில் வருவதில்லை.
மத: வெறும் வார்த்தைகளாக கொட்டுகிறாய். வேறு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
மா: 2012ம்ஆண்டில் வெளிவந்த “வின்-கேல்லப் சர்வதேசம்“ எனும் அமைப்பினுடைய ஆய்வறிக்கையின்படி “மிகக்குறைந்த வருமானம் உள்ளோர், குறைந்தவருமானம் உள்ளோர், மத்திம வருமானம் உள்ளோர், மத்திமத்தைவிடக் கூடுதல் வருமானம் உள்ளோர், மிகஅதிக வருமானம் உள்ளோர் எனும் ஐந்துபிரிவினரின் மதவுணர்வு முறையே 66%, 65%, 56%, 51%, 49% ஆக உள்ளது”. பொருளாதார வளம் மனிதர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், மதநம்பிக்கை குறைந்தவர்களாகவும் ஆக்குகிறது என்பது துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. மதம் பற்றிய மார்க்சிய சிந்தனை எவ்வளவு சரியானது என்பதை வாழ்வு நிரூபித்து நிற்கிறது.
மத: இந்தப் புள்ளிவிபரங்களை எல்லாம் நம்ப முடியாது. நம்மை ஏமாற்றிவிடும்.
மா: இதுஎன்ன வம்பாயிருக்கு? வார்த்தைகளையும் நம்பமாட்டாய், புள்ளிவிபரங்களையும் நம்பமாட்டாய் என்றால் என்ன செய்வது? ஆனந்தமாக வாழ்கிறவர்கள் அதிகம் உள்ள நாடு நார்வே எனும் செய்தி சமீபத்தில் வந்ததே பார்த்தாயா?
மத: ஆமாம் பார்த்தேன்
மா:  அங்கே நாத்திகர்கள் அதிகம் என்பதை அறிவாயா?
மத: ஓஹோ. நாத்திகர்கள் அதிகம் என்பதால்தான் ஆனந்தவான்கள் அதிகம் என்கிறாயா?
மா: இல்லை. ஆனந்தவான்கள் அதிகம் என்பதால்தான் நாத்திகர்கள் அதிகம் என்கிறேன். வாழ்வில் பிச்சுப்பிடுங்கல்கள் இல்லை என்றால் மனிதர்கள் கடவுளை நினைக்க மாட்டார்கள் என்கிறேன்.

(இன்னும் பேசுவார்கள்)






10


மத: மதங்கள் எல்லாம் ஒருநாள் மறையும் என்கிறாயே, இருப்பதில் ஒன்று கூடவா நல்லது இல்லை?
மா: என்ன துணிக்கடை வியாபாரி போலப் பேச ஆரம்பித்து விட்டாய்!
மத: இல்லை. கடவுள்தான் உனக்கு பிரச்னை என்றால் அவரை ஏற்காத சமண, புத்த மதங்கள் இருக்கின்றனவே?
மா: நீயே அவற்றை மதங்கள் என்றுதான் சொல்கிறாய்.
மத: ஆனாலும் அவற்றுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன அல்லவா?
மா: ஒற்றுமைகளும் உள்ளன. கடவுள் இல்லாத சமண, புத்த மதங்களில் தீர்த்தங்கரரையும்புத்தரையும் கடவுளாக்கி விட்டார்கள். அவர்களது பள்ளிகளுக்கும் விஹாரைகளுக்கும் போய்ப் பார். அப்படியே இந்துக் கோயில்கள் போலவே விக்ரகராதனை,படையல்,பூஜை என்று எல்லாம் நடக்கின்றன. உண்மையில் இவற்றை எல்லாம் முதலில் கொண்டு வந்தது இந்த மதங்களே. இவை மக்களை கவருவதை பார்த்தே வெறும் யாகங்கள் செய்து வந்த பிராமணிய மதம் தானும் கோயில் கட்ட ஆரம்பித்தது, இவர்களுடையதைக் கைப்பற்றி கோயில்களாக மாற்றியது.
மத: கடவுள் நம்பிக்கை இருக்கட்டும். இதர விஷயங்களும் ஒரேமாதிரிதானா? வித்தியாசமே இல்லையா?
மா: மதங்களின் பொதுத்தன்மை மனிதத்தைமீறிய அமானுஷ்யத்திலும்,இகலோகத்தை தாண்டிய பரலோகத்திலும் நம்பிக்கை கொள்ள வைப்பதில் இருக்கிறது. இது இந்த பூவுலகிலேயே மாற்றத்திற்கு வழி உண்டு, அதைக் கொண்டுவர மனித சக்தியால் முடியும் எனும் நம்பிக்கையை சிதைக்கிறது. அதனால்தான் மதங்களில் தேர்வுசெய்ய ஏதுமில்லை என்கிறோம்.
மத: அப்படியெனில் கம்யூனிஸ்டு கட்சிகளில் மதநம்பிக்கையற்றவர்களைத்தான் சேர்ப்பீர்களா?
மா: கம்யூனிஸ்டு கட்சியானது உழைப்பாளர்களின் கட்சிதானே தவிர நாத்திகர்களின் கட்சி அல்ல. மார்க்சியர்களின் கோட்பாடு அறிவியல்பூர்வ நாத்திகமே என்றாலும் அவர்களால் தலைமை தாங்கப்படும் கம்யூனிஸ்டு கட்சி உடல் மற்றும் மூளை உழைப்பாளர்கள் அனைவருக்கும் சொந்தமானது. அவர்களில் ஆகப் பெரும்பாலோர் மத நம்பிக்கையாளர்களே. “அதைக் கைவிட்டுவிட்டு கட்சிக்கு வருக” என்றால் அவர்களால் வர முடியாது. அதனால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆள் சேராது, அது பலவீனமாகிப் போகும். அதனால்தான் நாத்திகத்தை தனது உடனடி திட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி சேர்க்க வேண்டியதில்லை எனறார் லெனின். 1905ல் அவர் எழுதிய “சோசலிசமும் மதமும்“ எனும் கட்டுரையில் இது பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.
மத: ஆக உங்கள் கட்சியும் ஆத்திகர்களின் கட்சிதான்!
மா: வர்க்கப் போராட்ட அனுபவத்தாலும், கிடைக்கும் தத்துவ போதனையாலும் அறிவியல்பூர்வ நாத்திர்களாக மாறிக் கொண்டிருப்போரின் கட்சி.

(இன்னும் பேசுவார்கள்)







11

மத: ஆத்திகர்களையும் கட்சியில் சேர்த்துக் கொண்டு, அவர்களையும் வைத்து ஆட்சியைப் பிடித்து, பிறகு நாத்திக அரசு என்று அறிவித்து விடுவீர்கள்.
மா: அத்தகைய ஏமாற்றுவேலையை நாங்கள் அறியோம். நாங்கள் வெளிப்படையானவர்கள். அந்த 1905ம் ஆண்டு கட்டுரையிலேயே அரசு பற்றி இன்னும் விரிவான நோக்கை முன்வைத்தார் லெனின். காரணம் அது அனைத்து குடிமக்களுக்கானது. “மதம் அரசு சார்புடையதாக இருக்க கூடாது. எவருக்கும் எந்த மதத்தை தழுவுவதற்கும் பரிபூரண உரிமை உண்டு. எந்த மதத்தையும் தழுவாவமல் நாத்திகனாக இருக்கவும் உரிமை உண்டு” என்றார்.
மத: அது நவம்பர் புரட்சிக்கு முன்பு சொன்னது. ரஷ்யாவின் ஆட்சித் தலைவராக வந்த பிறகு என்ன செய்தார்?
மா: சொன்னதைச் செய்தார். 1918 பிப்ரவரி 2ல் அவர் வெளியிட்ட அரசாணையானது”அரசிடமிருந்து திருச்சபை பிரிக்கப்பட்டது,திருச்சபையிடமிருந்து கல்வி நிறுவனம் பிரிக்கப்பட்டது” என்று அறிவித்ததே தவிர நாத்திக அரசு என்று பிரகடனப்படுத்தவில்லை. மதச்சார்பற்ற அரசைத்தான் அந்த மெய்யான புரட்சித் தலைவர் நிறுவினார்.
மத: ஆனாலும் திருச்சபைகளை நடத்துவதில் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள் பாதிரியார்கள்.
மா: ஒரேயொரு சிரமம்தான். இதுவரை அரசு கஜானாவிலிருந்து பொதுமக்கள் பணத்தை எடுத்து கொழித்துக் கொண்டிருந்தார்கள். அது நிறுத்தப்பட்டது. பக்தர்களின் காணிக்கையிலிருந்து தேவாலயத்தை நடத்திகொள்ளுமாறு சொல்லப்பட்டது. அதுதானே நியாயம். மக்களின் வரிப்பணம் பொது நலத் திட்டங்களுக்கானதே தவிர தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு அல்லவே.
மத: அது சரி. ஆனால் நாத்திகப் பிரச்சாரம் வேகமாக நடந்ததே, அதன் முன்பு திருச்சபை தடுமாறியதே.
மா: ஆம் பிரச்சாரம் நடந்தது. மார்க்சியர்கள் அதை பொதுவெளியில் நடத்தினார்களே தவிர தேவாலயங்களுக்குள் புகுந்து நடத்தவில்லை. அங்கே நடந்தது கிறிஸ்தவப் பிரச்சாரமே. பிரச்சாரப் போட்டியில் வெற்றிதோல்வி அதனதன் உள்ளடக்க சிறப்பில்தானே இருக்கிறது? ஒவ்வொரு மதமும் பிற மதங்களுடன் போட்டியிடும்போது இதைத்தானே சொல்லுகிறது?
மத: ம்ம்...ஆனால் நாத்திகப் பிரச்சாரம் என்றாலே பக்தர்களின் மனங்களைக் காயப்படுத்தும் வேலைதானே நடக்கிறது.
மா: இது வகையில் இரண்டுகோடிகள் இருக்கின்றன. ஒன்று, பாமர பக்தர்களின் மனம் புண்படும்படி நாத்திகப் பிரச்சாரம் செய்வது. மற்றொன்று, நாத்திகப் பிரச்சாரத்தையே கைவிடுவது.இரண்டுமே தவறு.பக்தர்களின் பொதுஅறிவிற்கும் மனசாட்சிக்கும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் நாத்திக பிரசாரத்தை நடத்த வேண்டும். அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மத: பதமான நாத்திகப் பிரச்சார உரிமை நியாயமே.
மா: பக்தர்களிடம் நாங்கள் பதமாக நடந்து கொள்கிறோம். மதவெறியர்களிடம் நீங்கள் கறாராக நடந்து கொள்ளுங்கள்.

(இன்னும் பேசுவார்கள்)







12

மத:  பிறநாடுகளில் எப்படியோ, நமது பாரதத்தில் மதச்சார்பற்றஅரசு என்பதற்கு தேவையே இல்லை. இங்கு உருவான அரசுகள் எல்லாம் “சர்வமதம் சம்மதம்“ என்று இயங்கியவை.
மா: அப்படியா சொல்கிறாய், சுல்தான்கள்-முகலாயர்கள் ஆட்சி எப்படி?
மத: அது..அதுவெல்லாம் ஓரவஞ்சனையானதே.
மா: ஆங்கிலேயர்களின் ஆட்சி எப்படி?
மத:  அதுவும் ஓரவஞ்சனையானதே.
மா: பிறகு அதற்கு முந்திய ராஜாக்களின் ஆட்சிகள் மட்டும் எப்படி ஓரவஞ்சனை இல்லாதவையாக இருக்கும்?
மத:  நீ தர்க்கவாதத்தால் என்னை மடக்க பார்க்கிறாய். இந்துமன்னர்கள் எல்லாம் சர்வமதம் சம்மதம் என்று ஆட்சி நடத்தியவர்களே.
மா: “இந்து” எனும் சொல்லே வேதங்களில், இதிகாசங்களில், புராணங்களில், சாஸ்திரங்களில் இல்லாதது. அல்பெரூணி போன்ற முஸ்லிம் வரலாற்றாளர்கள் தந்த, ஆங்கிலேயர்கள் பரவலாக்கிய பெயர் அது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாம் சமண/புத்த/சைவ/வைணவ மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
மத: அதனாலென்ன, அவர்கள் எல்லாம் சர்வமதம் சம்மதம் என்று ஆட்சி நடத்தியவர்களே.
மா: சமணனாக இருந்த பல்லவன் மகேந்திரவர்மனை நாவுக்கரசர் சைவனாக மாற்றினார் என்பது உண்மையா?
மத:  ஆமாம்..ஆமாம். அதற்கு பிறகுதானே வடதமிழகத்தில் சைவமதம் பரவியது.
மா: சமணனாக இருந்த கூன்பாண்டியனை ஞானசம்பந்தர் சைவனாக மாற்றினார் என்பது உண்மையா?
மத:  ஆமாம்..ஆமாம்.அதற்குபிறகுதானே தென்தமிழகத்தில் சைவமதம் பரவியது.
மா: சர்வமதம் சம்மதம் என்றால் ஏன் இந்த மதமாற்றும் வேலைகள் நடந்தன? ஏன் மதம் மாறினார்கள் அந்த மன்னர்கள்?
மத:  சமணமத தலைவர்கள் மிகமோசமானவர்கள். அவர்களை கடுமையாக சாடி தேவாரத்தில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பாடியிருக்கிறார்கள்.
மா: இதற்குப் பெயர்தான் சர்வமதம் சம்மதமா?
மத:  மதத்தலைவர்களுக்குள் அப்படி காரசார விவாதங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் அரசர்களை பொறுத்தவரை அவர்கள் சகலமதங்களையும் சமமாகத்தான் பாவித்தார்கள்.
மா: அப்படியா? பெரியபுராணம் பற்றி என்ன நினைக்கிறாய்?
மத: ஆ.. அது தமிழ் வேதமாம் மூவர் தேவாரத்திற்கு அடுத்து புனிதமானது, சேக்கிழார்பெருமான் சிவகிருபையால் எழுதியது.
மா: அதிலிருந்து சில காட்சிகளைக் காண்போம்.

(இன்னும் பேசுவார்கள்)







13

மத: பெரியபுராணத்திலிருந்து சில காட்சிகளா! ஆஹா புண்ணியமன்றோ. சொல்லு..சொல்லு.
மா: பாடலிபுத்திரத்திலிருந்த சமண பள்ளியை மகேந்திரவர்மனை கொண்டு இடித்து அந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு குணபரவீச்சரம் எனும் சிவன் கோயிலைக் கட்டவைத்தார் நாவுக்கரசர் என்கிறது பெரியபுராணம்.
மத: அப்படியா? பிறமத வழிபாட்டுத்தலத்தை சைவமத மன்னன் ஒருவன் இடித்தானா? நம்ப முடியவில்லையே!
மா:  “பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்துக் குணபரவீச்சரம் எடுத்தான்” என்று சந்தேகத்திற்கிடமின்றி கூறியிருக்கிறார்.
மத: ஏதோ விதிவிலக்காய் நடந்திருக்கும்.
மா:  பழையாறை வடதளியில் ஒரு சிவன் கோயில் இருந்ததாகவும், அதை மறைத்து சமணர்கள் தம் பள்ளியை எழுப்பிவிட்டார்கள் என்றும் புகார் கூறினார் நாவுக்கரசர். அவர் பேச்சை ஏற்ற அரசன் சமணப்பள்ளியை இடித்துவிட்டு சிவன் கோயிலை எழுப்பினான் என்கிறது பெரியபுராணம்.
மத: பாபர் மசூதி இடிப்பு போலவே இருக்கிறதே!
மா:   நாவுக்கரசர் பாணியில் திருவாரூரில் தண்டியடிகள் செயல்பட்டார். அங்கு சிவன்கோயில் குளத்தை விரிவாக்க அதையொட்டி இருந்த சமணர்களின் பள்ளிகளை-பாழிகளை இடிக்க வைத்தார் அரசனைக் கொண்டு.
மத:அளக்கிறாயோ? உண்மையில் இப்படிப் பாடியிருக்கிறாரா சேக்கிழார்.
மா:  “பாழிபள்ளிகளும் பறித்து குளம்சூழ் கரைபடுத்து மன்னவனும் மனமகிழ்ந்து வந்து தொண்டர் அணி பணிந்தனன்” என்று தெளிவாகப் பாடியிருக்கிறார்.
மத: ம்ம்ம்..
மா:  இவற்றுக்கெல்லாம் உச்சம்தான் மதுரையில் கூன்பாண்டியனால் நடத்தப்பட்ட எண்ணாயிரம் சமணர் கழுவேற்றல்.
மத: அதுபற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது கவிஞர் என்ற வகையில் உயர்வு நவிற்சி அணியாகப் பாடியது என்கிறார்களே சில ஆய்வாளர்கள்.
மா: பெரியபுராணத்தில் வருகிற மற்றவை எல்லாம் நடந்தவை, இது மட்டும் உயர்வு நவிற்சி அணியா? சேக்கிழார் மட்டுமல்ல அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியும் சம்பந்தரைப் பற்றி கூறும் போது “கழுவில் தைத்த மறையோனை” என்று பெருமைபொங்க பாடியிருக்கிறார்.
மத: தலைசுற்றுகிறது. எதைஎதையோ சொல்லி என்னை குழப்புகிறாய்.
மா: நீ மிரள வேண்டாம். இங்கு நான் எடுத்துக்காட்டுவது இந்தபூமியிலும் நடந்தது மதச்சார்பு அரசுகளே என்பதுதான். “சர்வமதம் சம்மதம்“ என்று அனைத்து மதங்களையும் சமமாக பாவித்த அரசுகள் இங்கே நடக்கவில்லை. அந்த நிலப்பிரபுத்துவயுகத்தில் மதச்சார்புஅரசே காலத்தின் விதியாக இருந்தது.ஆனால் இங்கும் மதச்சார்பற்ற அரசு தேவைப்பட்டது, அதற்கு காலம் கனிய வேண்டியிருந்தது.

(இன்னும் பேசுவார்கள்)





14

மத:  கடந்த காலங்களில் இங்கும் மதச்சார்பு அரசுகளே இருந்தன என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒருமதச் சார்பு அரசுக்கு பதிலாக அனத்து மதங்களையும் சமமாக பாவிக்கிற அரசுதானே வரவேண்டும்? மதச்சார்பற்ற அரசு என்பது என்ன நியாயம்? இங்கு மதநம்பிக்கையாளர்கள்தானே ஆகப் பெரும்பாலோர்.
மா: மதநம்பிக்கையாளர்கள்தாம் அதிகம். ஆனால் அது அவர்களின் தனிவாழ்வு, தனிநம்பிக்கை தொடர்பானது. அரசு என்பதோ பொது வாழ்வு, பொதுக் காரியங்கள் தொடர்பானது. அதில் மதம் சம்பந்தப்பட வேண்டியதில்லை.
மத:  அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்றுதானே சொல்கிறேன். கடந்தகாலம் போல ஓரவஞ்சனையாய் இருக்கச் சொல்லவில்லையே?
மா: அரசால் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க முடியுமா? இந்தியாவில் 80%பேர் இந்துக்கள். அரசியலாளர்கள்-அதிகாரிகளில் அந்த விகிதத்தை காட்டிலும் அதிகம்பேர் இந்துக்கள்.அவர்கள் இந்துமத பழக்கவழக்கங்களைத்தான் பின்பற்றுவார்களே தவிர இதர மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பார்களா?
மத: ம்ம்..மாட்டார்கள்.
மா: நமது அரசியல் சாசனத்தின் முகவுரையில் “மதச்சார்பற்ற” எனும் சொல் உள்ளது.
மத:  1975-76 அவசரநிலை ஆட்சி காலத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டது.
மா: அப்போது நடந்த ஒரே நல்ல காரியம். ஆனால் நடப்பு என்ன? அரசுதிட்டங்கள் பலவும் புரோகிதரைக் கொண்டு பிராமணியச் சடங்குவழி துவக்கப்படுகின்றன.அப்போது அங்கிருக்கும் பிறமதத்தவரின் உணர்வுகள் பாதிக்கப்படுமே என்று ஆட்சியாளர்கள், உயர்அதிகாரிகள் கவலைப்படுவதில்லை.
மத: இது என்ன வம்பாயிருக்கு? இங்கு இந்துக்கள்தாம் 80% என்றால் அவர்களது நம்பிக்கைப்படிதானே அரசு விழாக்களும் நடத்தப்பட வேண்டும்?
மா: பார்த்தாயா? அரசு அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் என்பதை அதற்குள் மறந்து போனாயே?
மத:  சிக்கல்தான்.
மா: தெலுங்கானா உதயமானதற்கு நேர்த்திக்கடன் என்று அனைத்து மத மக்களின் வரிப்பணத்திலிருந்து ஏழுமலையானுக்கு அந்த மாநில முதலவர் தங்க -வைர நகைகளைச் சமர்ப்பித்தார் அல்லவா?
மத: ஆமாம், நானும் பத்திரிகைகளில் பார்த்தேன்.
மா: இது ஓரவஞ்சனை இல்லையா? இது எப்படி சகல மதங்களையும் சமமாக பாவிப்பதாகும்?
மத:  சிரமம்தான். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவரவர் தெய்வத்தைதான் வழிபடுவார்கள்.
மா: அதனால்தான் சொல்கிறோம் அரசு அனைத்து மதங்களிலிருந்தும் விலகி இருக்கட்டும் என்று.
மத: அப்படியென்றால் ஆட்சியாளர்கள்-அதிகாரிகளுக்கு மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்கிறாயா?
மா: இல்லை. அப்படிச் சொல்லவில்லை. அவர்களது மதவழிபாடுகளை அவர்களது சொந்த இடங்களில், சொந்தச் செலவில் செய்து கொள்ளட்டும் என்கிறேன். அரசு மதச்சார்பற்றதாக இயங்கட்டும்.

(இன்னும் பேசுவார்கள்)







15

மத: அனைத்து மதங்களையும் அரசால் சமமாக பாவிக்க முடியாது என்கிறாய். அப்படியென்றால் எது பெரும்பான்மையோர் மதமோ அதையே அரசின் மதம் என்று அறிவித்துவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை என்று படுகிறது.
மா: அதாவது பழைய காலத்திற்கே திரும்பலாம் என்கிறாய்.
மத:  ஆனால் பழையகாலம் போல சிறுபான்மையோர் மதங்களை அரசு ஒடுக்கக் கூடாது.
மா: அதாவது இந்துமதத்தை இந்திய அரசின் மதமாக அறிவிக்க வேண்டும்,  ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களை ஒடுக்கக் கூடாது என்கிறாய்.
மத: ஆமாம்..ஆமாம். அப்படித்தானே முஸ்லிம் மற்றும் பௌத்த நாடுகளில் இருக்கிறது.
மா: அந்த நாடுகளில் இந்துமதம், கிறிஸ்தவம் போன்ற சிறுபான்மையோரின் மதங்கள் ஒடுக்கப்படுவதில்லை என்கிறாயா?
மத: ம்ம்.. ஒடுக்கத்தான் செய்கிறார்கள்.
மா: பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, இலங்கையில் இந்து மதம் ஒடுக்கப்படுகிறது என்கிறார்களே?
மத:  ஆம். அப்படித்தான் சொல்கிறார்கள்.
மா: அந்த நிலைதானே இந்தியாவிலும் ஏற்படும்? இங்கே இந்து மதம் அரச மதமானால் பிற மதங்கள் நிச்சயம் ஒடுக்கப்படும்.
மத:  இல்லை. இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. இது இயல்பிலேயே விசால எண்ணம் கொண்டது.
மா: இப்போதுதான் சைவம் எப்படி சமணத்தை நடத்தியது என்று பார்த்தோம் அதற்குள் அதை மறந்து விட்டாய்.
மத:  நீ பழைய கதையையே பேசிக் கொண்டிருக்கிறாய். அதையெல்லாம் கடந்து வந்துவிட்டது இந்துமதம்.
மா: நல்லது. பழையகதை வேண்டாம், புதுக்கதை பேசுவோம். எது இந்து மதம்?
மத: அது சநாதன தர்மம். அதாவது அதுவே பழமையானது.
மா: எந்தவொரு மதவாதியும் தன் மதத்தை இருப்பதிலேயே பழைமையானது என்றுதான் சொல்லுவார். ஆனால் இந்து திருமணச் சட்டமானது இந்து மதத்தை இஸ்லாம், கிறிஸ்தவம், பார்சி, யூதம் அல்லாதது என்றே வரையறுத்திருக்கிறது.
மத: ஏன் அப்படி?
மா: இந்து மதம் என அழைக்கப்படுவது உண்மையில் ஒரு மதம் அல்ல. அது பல மதங்களின் கூட்டமைப்பு. அதில் சீக்கியம், சமணம், பௌத்தத்தையும் கூடச் சேர்த்திருக்கிறது நமது அரசியல் சாசனம்.

(இன்னும் பேசுவார்கள்)






16

மத: இந்து மதம் ஒரு மதம் அல்லதான், அதுவொரு வாழ்க்கை முறை.
மா: அப்படியென்றால் விண்ணப்ப படிவங்களில் மதம் எனக் கேட்கப்படும் இடத்தில் ஏன் “இந்து” என எழுதுகிறீர்கள்?
மத: அது வந்து...அது மதமும்தான் வாழ்க்கை முறையும்தான்.
மா: எப்படியோ மதம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆனால் இந்தமதத்தில் ஒருமைத்தன்மை கிடையாது. அல்லா, கர்த்தர் போல ஒரே சாமி, குரான், பைபிள் போல ஒரே புனித நூல் கிடையாது. இதன் பன்மைத்தன்மையே இது மதங்களின் கூட்டமைப்பு என்பதற்கு சாட்சி.
மத: ஆம். இதுதான் இந்து மதத்தின் தனிச் சிறப்பு. இதை மார்க்சியர்களும் உணர்ந்திருப்பது நல்ல விஷயம்.
மா: இங்கே மாமிசம் உண்ணாத சாமிகளும் உண்டு. மாமிசத்தை தவிர வேறு எதையும் உண்ணாத சாமிகளும் உண்டு. இங்கு கருவறைக்குள் பிராமண அர்ச்சகர்களை மட்டும் அனுமதிக்கும் சாமிகளும் உண்டு.  இங்கு பங்காளிகளில் மூத்தவரை பூசாரியாகக் கொண்ட சாமிகளும் உண்டு. இங்கு அர்ச்சனை சமஸ்கிருதத்தில் மட்டுமே நடக்கவேண்டும் என்கிற சாமிகளும் உண்டு. இங்கு தமிழில் அவரவருக்கு தெரிந்த பாட்டுப்பாடி பூசை செய்வதை ஏற்கிற சாமிகளும் உண்டு.
மத: அருமை, அருமை. சரியாகச் சொன்னாய்.
மா: ஆனால். இது தவறு, இந்தக் கிராமக் கோயில் பூசை முறையை எல்லாம் முறைப்படுத்தவேண்டும் என்று ஒரு கோஷ்டி சொல்லுகிறதே?
மத: அது யார்?
மா: ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர்.
மத: அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மா: இந்த கிராமப் பூசாரிகளுக்கெல்லாம் முறையான பூசை முறையைச் சொல்லித் தர வேண்டும் என்கிறார்கள்.
மத:  முறையான பூசைமுறை என்றால்..?
மா: கோயிலில் ஆடுகோழி வெட்டக் கூடாது, சாமிக்கு மாமிச உணவு படைக்க கூடாது, தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது, தேவ பாஷையாம் சமஸ்கிருதத்திலேயே அர்ச்சனை செய்யவேண்டும் என்று சொல்லப்போகிறோம் என்கிறார்கள்.
மத: இது இந்துமதத்தின் பன்மைத் தன்மையை அழித்து, அதை ஒற்றைத் தன்மையாய் ஆக்கும் வேலையல்லவா?
மா: பளிச்சென்று சொன்னால், இந்து மதத்தின் இதர பிரிவுகளையும் பிராமணியப் பிரிவு போல ஆக்கும் வேலை.
மத: இது நியாயம் இல்லையே. இது இந்து மதத்தின் இயல்புக்கே எதிரானதே.
மா: ஆம், எதிரானதுதான். ஆனால் அதைச் செய்யத்தான் அந்தப் பரிவாரம் கிளம்பியிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற இதர மதத்தவரிடம் எப்படி நடந்து கொள்வார்கள், இவர்கள் கையில் “இந்து அரசு” சிக்கினால் என்னாகும் என்று யோசித்துப் பார்.

(இன்னும் பேசுவார்கள்)






17

மத: நீ சொல்வது போல சிறுபான்மை மதத்தவரிடம் அவ்வளவு வெறுப்புடனா இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்?
மா: 1923ல் வெளிவந்தது சாவர்க்கரின் “இந்துத்துவா” நூல். அதில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறிவைத்து தாக்கியிருந்தார். “அவர்களது புண்ணியபூமி வெகுதொலைவில் உள்ள அரேபியாவில் அல்லது பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த நாட்டின் மீதான அவர்களின் நேசம் பிளவுபட்டதாக உள்ளது” என்று அவர்களது தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கினார்.
மத: இது என்ன அநியாயமாக இருக்கிறது! இங்கிலாந்து கிறிஸ்தவர்களுக்கும் ஜெர்மன் கிறிஸ்தவர்களுக்கும் புண்ணியபூமி இயேசுபிறந்த பாலஸ்தீனம்தான். அதற்காக அவர்கள் தத்தம் நாடுகளுக்கு துரோகம் செய்தார்களா? அவரவர் நாடுகளுக்காக உலகப்போரில் ரத்தம் சிந்தினார்களே!புண்ணிய பூமிக்கும் தாய் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
மா: நன்றாகக் கேட்டாய். இன்னும் வேடிக்கை என்னவென்றால் இதே சாவர்க்கர் புனிதமாகக் கருதும் வேதங்கள் பிறந்த இவர்களது புண்ணிய பூமியாகிய சிந்து நதி தீரம் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது! அப்படியெனில் இவர்களது நேசமும் பிளவுபட்டதுதானா?
மத: சரித்திரம் அவரைப் பழிவாங்கி விட்டது.
மா: அது தெரியாமல் அவரையும் அவரது நூலையும் வியந்து போற்றினார் ஹெட்கேவார்.
மத: அவர் யார்?
மா: அவர்தான் ஆர்எஸ்எஸ்சை 1925ல் துவக்கியவர். அதன் கொள்கையாக இந்துத்துவா ஆகிப்போனது.
மத:அதாவது,  பிறமத வெறுப்பு.
மா: இதை மேலும் பரப்பியவர் அந்த அமைப்பின் பொதுச்செயலாளராக 1939ல் ஆன கோல்வால்கர். அதே ஆண்டு அவர் எழுதிய “நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை” எனும் நூலில் கூறினார்: “இந்துஸ்தானத்தில் உள்ள அந்நிய சாதியினர் இந்து கலாச்சாரம் மற்றும் மொழியை தமதாக்கிக் கொள்ள வேண்டும். இந்துமதத்தை மதிக்கவும் அதைப் போற்றி துதிக்கவும் கற்றுகொள்ள வேண்டும். இந்து சாதி மற்றும் கலாச்சாரத்தைப் புகழ்வதைத் தவிர வேறுசிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. அல்லது இந்து தேசத்திற்கு முழுமையாக அடங்கியிருந்து எதையும் கோராமல், எந்தஉரிமையும் வேண்டாமல், தனிச்சலுகை எதையும் தேடாமல், குடியுரிமைகூட இல்லாமல் இந்த நாட்டில் இருந்து கொள்ளலாம்.”
மத: இந்து அல்லாதவர்கள் என்பதால் பிற மதத்தவர்கள் எல்லாம் அடிமைகள் போல வாழ வேண்டும் என்றாரா?
மா: ஆம்.அதுதான் தாங்கள் உருவாக்க நினைக்கும் “இந்துராஷ்டிரத்”தின், நீ கூடச் சொன்னாயே “இந்து அரசு” என்று, அதன் கொள்கையாக இருக்கும் என்றார்.
மத: ஐயோ, நான் இப்படி நினைத்துச் சொல்லவில்லை. ஆகப்பெரும்பாலோர் இந்துக்கள் என்பதால் இந்துஅரசு என அறிவிப்பதில் என்ன தவறு என்று நினைத்தேன்.ஆனால் அது சிறுபான்மையோரை அடக்கிஒடுக்கும் கருவியாக மாறும் என்றால் வேண்டவே வேண்டாம். ஆனால் ஒரு சந்தேகம். அவரது பிந்திய காலத்திலும் அவரது கொள்கை இப்படித்தான் இருந்ததா?
மா: 1940ல் ஆர்எஸ்எஸ் சின் தலைவராகிப் போனார். அதன் பிறகான அவரின் கருத்துக்கள் “சிந்தனைக் கொத்து” என்று ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அதிலிருந்து சிலமுத்துக்களை உன்முன் கொட்டுகிறேன்.நீயே ஒருமுடிவுக்கு வா.

(இன்னும் பேசுவார்கள்)






18

மத: கோல்வால்கரின் அந்த நூலில் அப்படி என்ன இருக்கிறது?
மா: சாவர்க்கரின் “இந்துத்துவா”நூலை அதில் அவர் புகழ்ந்தது மட்டுமல்லாது,அதை அடிப்படையாகக் கொண்ட “இந்துராஷ்டிர”த்தை-இந்து தேசத்தை- இந்து அரசை அமைப்பதே ஆர்எஸ்எஸ் சின் லட்சியம் என்று வெளிப்படையாக அறிவித்தார்
மத: சரிதான்.
மா: அதுமட்டுமல்ல, அந்த இந்து அரசுக்கான “உள்நாட்டு எதிரிகள்” என்று மூன்று குழுவினரை அடையாளப் படுத்தினார்.
மத: அவர்கள் யார்?
மா: “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்”. இந்த ஒவ்வொரு குழுவினர் பற்றியும் தனித்தனியாக, விரிவாக வன்மத்தோடு உரைத்திருக்கிறார்.
மத: ஆஹா! அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சியல்லவா நடந்து கொண்டிருந்தது, அவர்களை இந்த எதிரிகள் பட்டியலில் சேர்க்கவில்லையா?
மா: இல்லை. “ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து போராடி இந்துக்கள் தம்சக்தியை விரயம் செய்யக்கூடாது” என்பதே ஹெட்கேவார், கோல்வால்கரின் முடிவாக இருந்தது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் 1925 முதல் 1947 வரையில் நடந்த சுதந்திர போராட்டங்கள் எதிலும் கலந்து கொண்டதில்லை. அவர்களுடைய குறி எல்லாம் இந்த மூன்று குழுவினர் மீதே.
மத: இவர்கள் எப்படி இந்துக்களின் எதிரிகள் ஆவார்கள்? அவர்களும் ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்தவர்கள்தானே?
மா: விஷயத்தின் மையப் பொருளைத் தொடுகிறாய். இந்து வெகுமக்களுக்கு மட்டுமல்ல இந்திய வெகுமக்களுக்கும் இவர்கள் அல்ல எதிரிகள்.காரணம் அவர்கள் எண்ணிக்கையிலும் சரி, சமூக ஆளுகையிலும்சரி, பொருளாதார வளத்திலும் சரி மிகவும் பின்தங்கியவர்கள், அவர்கள் எப்படி எதிரிகளாக இருக்க முடியும்?
மத: ஆனால் முஸ்லிம்களை காங்கிரஸ் தாஜா செய்தது எனப்படுகிறதே?
மா: தாஜா செய்திருந்தால் அவர்கள் முன்னேறி இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அரசுஅமைத்த சச்சார்குழு மற்றும் ரங்கநாத்மிஸ்ரா கமிசன் அறிக்கைகளின்படி அவர்கள் கல்வியில், அரசுபணிகளில், கம்பெனிஉடமையில், பொதுவாழ்வில் என்று அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில்14% ஆக உள்ளனர்  முஸ்லிம்கள். ஆனால் அதற்கும் இந்த துறைகளில் அவர்களின் பங்கெடுப்புக்கும் சம்பந்தமேயில்லை.ராணுவம்,ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுகளில் அவர்கள் 2% முதல் 4% வரைதான். எங்கே நடந்திருக்கிறது தாஜா?
மத: பிறகு ஏன் இந்த மூன்று குழுவினரையும் எதிரிகள் என்கிறார்கள்?
மா: ஏன் தெரியுமா? உண்மையான எதிரிகளை இந்து மக்களிடமிருந்தும், இந்திய மக்களிடமிருந்தும் மறைப்பதற்காக. அதற்காகத்தான் இப்படிப் பொய்யான எதிரிகளைக் கட்டமைக்கிறார்கள்.
மத: உண்மையான எதிரிகள் யார்?
மா: சமூகசீர்திருத்தமும் சமயசீர்திருத்தமும் நடக்கக் கூடாது என்று நினைக்கிற பிராமணியவாதிகள் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியும் பொருளாதாரசமத்துவமும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிற பகாசுர முதலாளியவாதிகள். இந்த இரு கூட்டத்தாரும் கூட்டுச் சேர்ந்துதான் நமது நாட்டை நாசமாக்குகிறார்கள். அது மக்கள் தொகையில் ஆகப்பெரும்பான்மையாக இருக்கிற இந்துமக்களுக்கு தெரியக்கூடாது என்று அவர்களை திசைதிருப்ப முஸ்லிம்களை-கிறிஸ்தவர்களை-கம்யூனிஸ்டுகளை எதிரிகளாகக் காட்டுகிறார்கள்.

(இன்னும் பேசுவார்கள்)





19

மத: சமூக-சமய சீர்திருத்தத்தில் சங்பரிவாரத்திற்கு அக்கறை இல்லை என்கிறாய். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள்தானே தீவிரமாகக் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
மா:  இது விஷயத்தில் பிறமதங்கள் பற்றி பேசுவார்களே தவிர இந்து மதம் பற்றி பேச மாட்டார்கள். அதனால்தானே மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி கேட்டார் : “முத்தாலக் பற்றி பேசுகிறவர்கள் ஏன் அதுகூடச் சொல்லாமல் மனைவியை கைவிடுகிற சிலஇந்துக்களின் பழக்கம் பற்றி பேசுவதில்லை? ஏன் இந்து மதத்தில் உள்ள விதவைகள் பற்றி பேசுவதில்லை? ஏன் சட்டமன்றம் /நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசுவதில்லை?”
மத: அதானே. நியாயமான கேள்வி.
மா:  இந்துப்பெண்கள் உரிமையில் மட்டுமல்ல, பட்டியல் சாதியினர்/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்டோர் உரிமையிலும் அவர்களுக்காக குரல் கொடுத்தது இல்லை. சொல்லப்போனால் அந்த உரிமைக்குரல் எழுந்தபோதெல்லாம் எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
மத: அப்படியா சொல்கிறாய், அதற்கான ஆதாரம் என்ன?
மா: 1990ல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்தியஅரசுபணிகளில் இடஒதுக்கீடு தர வி.பி.சிங் அரசு முடிவெடுத்தபோது அதை எதிர்த்து மாணவர்களைத் தூண்டிவிட்டது ஆர்எஸ்எஸ். விஷயத்தை திசைதிருப்பி, ஆட்சியைக் கவிழ்க்க அயோத்தியை நோக்கி ரத யாத்திரை துவக்கினார் அத்வானி, கவிழ்த்தே விட்டார்.
மத: அட ஆமாம்.
மா: இப்போதும்கூட பட்டியல்சாதியினர்மீது தீண்டாமை கொடுங்கரங்கள் நீளுகின்றன, அவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். அந்த சாதிவெறி ஆட்டத்திற்கு துணைநிற்கிறது சங் பரிவாரம். உ பி யில் ஒரு சாமியார் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சாதிவெறியர்கள் மேலும் துணிவு பெற்றவர்களாக அந்த மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.சாதிஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்கிறோம் கம்யூனிஸ்டுகள்.அதைஏற்று சட்டம் கொண்டு வரத் தயார் இல்லையே அவர்கள். கேட்டால் தாங்கள்தாம் இந்துக்களுக்காக இருக்கிறோம் என்கிறார்கள்.இந்த அடித்தட்டுமக்கள் இந்துக்கள் இல்லையா?
மத: நியாயமான கேள்விதான். இந்து சமூகசீர்திருத்தத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்து சமய சீர்திருத்தத்திற்குமா எதிராக இருக்கிறார்கள்?
மா: நிச்சயமாக. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பற்றி அவர்கள் பேசுவது உண்டா? சிதம்பரம் நடராஜர் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முடியவில்லையே, சில கோயில்களில் இந்துபெண்கள் நுழைய முடியவில்லையே அவற்றை எதிர்த்து குரல் கொடுத்தது உண்டா?
மத: நீ சொல்வதையெல்லாம் பார்த்தால் சங்பரிவாரத்தவர் சாதாரண இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்றல்லவா தெரிகிறது!
மா:  ஆம். அதுதான் உண்மையிலும் உண்மை.

(இன்னும் பேசுவார்கள்)




20

மத: அப்படியென்றால் சங்பரிவாரத்தினர் மேல்தட்டு இந்துக்களுக்கானவர்கள் என்கிறாயா?
மா:  அவர்களுக்கானவர்களும் அல்ல. அந்த இந்துக்களும் மதநல்லிணக்கத்தையே விரும்புகிறவர்கள். அவர்களிலும் எத்தனையோ ஜனநாயக உள்ளங்கள் உள்ளன. மதவெறியானது இயல்புவாழ்வை பாதிப்பதால் தங்களுக்கும் அது கேடுபயக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
மத: அப்படியென்றால் சங் பரிவாரத்தவர் யார்?
மா: அவர்கள் வகுப்புவாதிகள், வருணாசிரமவாதிகள், பிராமணியவாதிகள், பெரும் கார்பரேட்நிறுவனங்களின் கையாட்கள். அவர்கள் எந்தசாதியிலிருந்தும் தோன்றலாம். ஆனால் மதத்தின பெயரால் மக்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்கிறவர்கள்.
மத: மத மோதல்களுக்கு சங்பரிவாரத்தினர்தான் காரணமா? பிற மதங்களிலும் அத்தகையோர் இருக்கலாம் அல்லவா?
மா:  இருக்கிறார்கள். எல்லாவகை மதவெறியும் ஆபத்தானதே, அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் பெரும்பான்மை மதமானதால் இந்துமதத்தின் பெயரால் கிளப்பபபடும் வெறி பேராபத்தானது. அது ஆட்சிஅதிகாரத்தை பிடிக்கும் வலிமையுடையது.
மத: அது நிஜம்தான். மத்தியில் மட்டுமல்லாது உ பி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்துவிட்டார்களே! ஒருவிஷயம் தெளிவாகிறது மதங்கள் வேறு, மத வெறி வேறு; இந்து வேறு, இந்துத்துவா வேறு.
மா:  ஆம். காந்தி இந்து என்றால், கோட்சே இந்துத்துவாவாதி. காந்தி இந்து----முஸ்லிம் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார். கோட்சே இந்து-முஸ்லிம் மோதலை வேண்டி நின்றான்.
மத: இருவருமே ராமரைக் கும்பிட்டாலும் இருவருக்குமிடையேதான் எவ்வளவு வித்தியாசம்!
மா:  காந்தி கோட்சேக்கு இடையில் மட்டுமல்ல, இந்து வெகுமக்களுக்கும் சங்பரிவாரத்திற்கு இடையேயும் அந்த வித்தியாசத்தை நீ பார்க்கலாம்.
மத: எப்படிச் சொல்கிறாய்?
மா:  ஆண்டுதோறும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கிறது, ஆற்றில் அழகர் இறங்குகிறார்.
மத: ஆம். இந்த ஆண்டுகூட நடந்ததே.
மா:  லட்சக்கணக்கான மக்கள் கூடினார்களே, ஏதேனும் மத மோதல் நடந்ததா?
மத: இல்லை.
மா:  ஆனால் இந்து முன்னணியினர் விநாயகர் ஊர்வலம் நடத்தும்போது மட்டும் ஏன் மதமோதல் நடக்கிறது?
மத: அட ஆமாம். விஷயம் சாதாரண பக்தர்கள் சார்ந்தது அல்ல, சங் பரிவாரத்தி னர் சார்ந்தது.
மா:  இப்படித்தான் விஷயம் இந்தியா முழுக்க உள்ளது. 1992ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, 2002ல் குஜராத்தில் கொலைவெறியாட்டம், இன்று மாட்டுக்கறியின் பெயரால் வன்முறைகள், “ரோமியோ எதிர்ப்புப் படை” என்ற பெயரால் காதல் உரிமைக்கு எதிரான உருட்டல் மிரட்டல்கள், இத்யாதிகள் எல்லாம் சங் பரிவாரத்தின் கைவரிசையே தவிர சாதாரண இந்துக்களுக்கும் இவற்றுக்கும் சம்பந்தமில்லை.

(இன்னும் பேசுவார்கள்)







21

மத: ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. சங் பரிவாரத்தினரை ஒருபுறம் பிராமணியவாதிகள் என்கிறாய், மறுபுறம் அவர்களைப் பெரும்  முதலாளியவாதிகள் என்கிறாய். ஒன்று சநாதனம், மற்றொன்று நவீனம். இரண்டும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்?
மா: அதுதான் இந்தியாவின் வினோதம். இங்கே இந்த இரண்டும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்திருக்கின்றன.
மத: கொஞ்சம் விளக்கினால் நல்லது.
மா: அண்ணல் அம்பேத்கர் 1938ல் ரயில்வேத் தொழிலாளர் மாநாட்டில் பேசியதைக் கேள்: “இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்கு இரண்டு எதிரிகள். ஒன்று பிராமணியம், மற்றொன்று முதலாளியம். பிராமணியம் என்று நான் சொல்லும்போது ஒருவகுப்பு என்ற முறையில் பிராமணர்கள் அனுபவிக்கும் அதிகாரம், செல்வாக்கு, வளங்களைக் குறிக்கவில்லை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான உணர்வைக் குறிக்கிறேன்”.
மத: ஐரோப்பாவில் தோன்றிய முதலாளியமானது தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஆதரவாக நிற்பதாகத்தானே பறைசாற்றியது. அது எப்படி அவற்றுக்கு நேர்விரோதமான சநாதனத்துடன்- பழமை வாதத்துடன்- கைகோர்க்க முடியும்?
மா: வரலாற்றுரீதியாகப் பார்த்தால் கூடாதுதான். ஆனாலும் இந்தியாவில் அது தான் நடக்கிறது. அதனால்தான் அதை சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றேன்.
மத:எதற்காக இந்தக் கூடாநட்பு?
மா: தனது சமூக ஆதிக்கத்தை தொடர நினைக்கிறது பிராமணியம், தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கிறது முதலாளியம். இவற்றுக்கு உழைப்பாளி மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவது என்பதில் இந்த இரண்டுக்கும் ஒரு சந்திப்பு புள்ளி உள்ளது.
மத: இதற்கு நடைமுறை ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?
மா: கனடா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்த ஆய்வின்படி “இந்தியாவில் உள்ள ஆயிரம் பெரிய கம்பெனிகளது இயக்குனர் அவைகளில் இருப்போர்களில் 93% பேர் முன்னேறிய சாதியினர். 46% பேர் வைசியர்கள், 44% பேர் பிராமணர்கள்”. இதிலிருந்து முதலாளியத்திற்கும் பிராமணியத்திற்கும் இடையிலான உறவை நீ உணரலாம்.
மத: இந்த ஆய்வு முடிவு எதிலே வெளிவந்தது? வெளிநாட்டு ஆய்வுகள் என்று வருகின்ற பலவற்றை நம்ப முடியவில்லை.
மா: இது 11-8-12 தேதியிட்ட “எக்னாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி”யில் வந்தது.
மத: அது தரமான பத்திரிகைதான்,  நம்பலாம். ஆனாலும் சங்பரிவாரமானது பிராமணியம், முதலாளியம் இரண்டையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதற்கு இது போதுமான சாட்சியம் ஆகாதே.
மா: நீ விடாக்கண்டன். சங்பரிவாரத்தினர் ஒருபுறம் சங்கராச்சாரியார் போன்ற சநாதனிகளை வணங்குகிறார்கள்,மறுபுறம் அதானி-அம்பானி போன்ற நவீன பகாசுர முதலாளிகளோடும் நட்பாக இருப்பதைக் கவனி. அம்பானி விமானத்தில் ஏறி சங்கர மடம் செல்லும் விநோதத்தை நோக்கு.
மத: அட ஆமாம்.
மா: இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 1% ஆக உள்ள பகாசுர பணக்காரர்கள் நாட்டின் சொத்துக்களில் 49% ஐ கொண்டிருந்தார்கள் 2014ல். மோடிஅரசின் மூன்றாண்டு ஆட்சியில் அது 58% ஆக உயர்ந்து விட்டது! இந்தக் கூட்டணியின் பலன் யாருக்கு லாபம் தந்திருக்கிறது என்பது புரிகிறதா?
மத: ஆமாம் நானும் அந்தச் செய்தியைப் பார்த்தேன்.
மா: ஒருபுறம் இப்படி செல்வம் ஒரு சிறு கூட்டத்திடம் குவிகிறது என்றால் மறுபுறம் பெருவாரியான இந்திய மக்கள் வறுமையிலும் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வாடி வதங்குகிறார்கள். அவர்களது ஆவேசம் இந்த கூட்டணி நோக்கி- இந்த மெய்யான எதிரிகள் நோக்கி- திரும்பி விடக் கூடாது என்றுதான் சங்பரிவாரமானது திட்டமிட்டு மத மோதல்களைத் தூண்டுகிறது. அவற்றுக்கும் சாதாரண பக்தர்களுக்கும் சம்பந்தமில்லை.

(இன்னும் பேசுவார்கள்)



22


மத: மார்க்சியத்தின் கொள்கை ஆத்திகமா நாத்திகமா என்று ஆரம்பித்ததில் ஆத்திகர்களிலேயே  நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்து பேசுகிற நிலைக்கு வந்துவிட்டாயே!
மா: அதுதான் யதார்த்தம் என்றால் அதை அங்கீகரிப்பதில் தவறில்லை. மார்க்சியர்கள் எப்படி லட்சியவாதிகளோ அப்படி யதார்த்தவாதிகளும்கூட.
மத:  அப்படியென்றால் நீங்கள் எப்படி நாத்திகர்களோ அப்படி சாதாரண பக்தர்களின் மனவுணர்வுகளை மதிக்கக் கூடியவர்களும்தானே?
மா: நிச்சயமாக. இந்தக் கேள்வியை நான் வேறு மாதிரியாக உன்னிடமும் கேட்கலாம். நீ எப்படி ஆத்திகனோ அப்படி மதவெறியை எதிர்க்ககூடியவனும்தானே?
மத: நிச்சயமாக.
மா: இங்குதான் மார்க்சியர்களும் சாதாரண பக்தர்கள் மட்டுமல்லாது உன்னைப் போன்று மதநோக்கிலிருந்து வாழ்வை கணிக்கிற மதவாதிகளும்கூட சந்திக்கிற மையம் இருக்கிறது.
மத: அட ஆமாம். சந்தித்து..?
மா: சில பொது இலக்குகளை நோக்கி நாம் சேர்ந்து பயணிக்க முடியும்.
மத:  என்ன அந்தப் பொது இலக்குகள்?
மா: 1.சங்பரிவாரத்தை சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் முறியடிப்பது. 2.அதற்கு மறைமுகமாகத் தீனிபோடுகிற இதர மதவெறி அமைப்புகளை தனிமைப்படுத்துவது. 3. அரசியல்சாசனத்தில் எழுதப்பட்டுள்ள “மதச்சார்பற்ற அரசு” என்பதை நடைமுறையில் நிறுவுவது. 4.அதற்காக மதச்சார்பற்ற பொதுவாழ்வை கட்டமைப்பது. 5.அதற்காக மதச்சார்பற்ற கல்விமுறைமையை வேண்டுவது.6.வழிபாட்டுத்தலங்களை, திருவிழாக்களை மதவெறியர்கள் பயன்படுத்திடாமல் பார்த்துக் கொள்வது.7. மத நம்பிக்கைக்கும் மத வெறிக்கும் இடையிலான வேறுபாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்வது.8. இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் பகாசுர கார்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதைத் தடுக்க உரக்க குரல் கொடுப்பது.9. மெய்யான ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களுக்காகப் போராடுவது. 10. எளிமையான, நேர்மையான அரசியல் வாழ்வை வலியுறுத்துவது.
மத: இவை நமக்கான பொது இலக்குகள்தாம். “அரசியல்சாசனத்தில் உள்ள ‘மதச்சார்பற்ற’ எனும் சொல்லை நீக்க வேண்டும், அப்போதுதான் ‘இந்துஅரசை’ அமைக்க முடியும்“ என்று விஎச்பி தலைவர் தொகாடியா பேசியதாக செய்தி பார்த்தேன். ஒரு மதவெறிஅரசை நிலைநாட்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது உறுதியாகிறது. எனவே இந்த இலக்குகளை எட்ட நாம் சேர்ந்து போராட வேண்டியதுதான். ஆனால் எனது ஆத்திகத்தை நான் கைவிட மாட்டேன், அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பேன்.
மா: ஒருவர் விரும்பும் மதத்தை பின்பற்ற மட்டுமல்ல, பரப்பவும் அவருக்கு உரிமை கொடுத்திருக்கிறது நமது அரசியல்சாசனம். அதை மார்க்சியர்களாகிய நாங்கள் மதிக்கிறோம், அதைக் காக்க உங்களோடு கரம் கோர்ப்போம். அதே நேரத்தில் “விஞ்ஞானபூர்வ சிந்தனையை வளர்க்க வேண்டும்“ என்றும் நமது அரசியல்சாசனம் கூறுகிறது. அதைச் செய்வதற்கான எங்கள் உரிமையை நீங்கள் மதிக்க வேண்டும்.
மத: நியாயமான பேச்சு.
மா: மற்றபடி நாம்சேர்ந்து நடைபோட  ஒரு பாதை காத்திருக்கிறது.அது ராஜபாட்டை அல்ல, கரடுமுரடானது. நமது எதிரிகள், அந்த மதவெறியர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல. பல நூறு ஆண்டுகளாகப் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். வழிவழியாக வந்த அவர்களின் வாரிசுகள் சகலபக்கங்களிலும் இருக்கிறார்கள்.அவர்களின் விஷஅம்புகள் வெளிப்பட்டும், மறைந்தும் நம்மைக் குறி பார்க்கின்றன. போராட்டம் கடுமையாகத்தான் இருக்கப் போகிறது. எனினும் வெற்றி நமக்கே. காரணம் நியாயம் நம் பக்கம் இருக்கிறது. முன்னேற்றம் என்பதே சரித்திரம் எனும் மகத்தான விதி இயங்கிய வண்ணம் உள்ளது. மதவெறி மாய்ந்து மனித நேயம் சாசுவதமாவது அந்த முன்னேற்றத்தின் கச்சிதமான அடையாளம்.

(இத்தோடு இந்தப் பேச்சை முடித்துக் கொண்டார்கள்)



Comments