வெண்மணி: எரியும் நினைவுகள்


1

அந்த 1968 டிசம்பர் 25 அன்றும் உலகம் இயேசுவைத்தான் நினைத்திருந்தது. ஆனால் கீழ்வெண்மணி கிராமத்தில் ஒருவித சிலுவை ஏற்றம் நடந்திருந்தது. நிலப்பிரபுக்களுக்கும் பண்ணைத் தொழிலாளர்களுக்கும் இடையில் மூண்டவர்க்கப் போரில் 44 உயிர்கள் கருகி மாண்டன. அவர்களில் ஆகப் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும். அவர்கள் தம் உயிருக்கு அஞ்சி ராமய்யாவின் குடிசையில் தஞ்சம் அடைந்திருந்தனர். பண்ணையார்கள் சங்கத் தலைவர் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவரது அடியாட்களும் கோழைத்தனமாக அந்த பலவீனர்களை எரித்து சாம்பலாக்கினார்கள்.மெய்யான உழவர்களாகிய விவசாயக் கூலிகளை மனிதநேயத்தோடு நடத்தவில்லை பண்ணையார்கள். முதலாளித்துவம் பிறந்துவிட்ட காலத்திலும் அவர்களைப் பண்ணையடிமைகளாகத்தான் பாவித்தார்கள். அந்த 1960 களிலும் சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால் திணிப்பது, பெண்களை தரக்குறைவாக நடத்துவது என்பது தொடர்ந்தது. நெல்லாகத் தரப்பட்ட கூலியின் அளவை உயர்த்தச் சொல்லிக் கேட்டதைக்கூட அவர்களால் தாங்க முடியவில்லை.

அடிமைகளுக்கு ஏது பேரம் பேசும் உரிமை என்பதே நிலப்பிரபுக்களின் உள்ளார்ந்த மனநிலை. அவர்கள் விவசாயத் தொழிலாளர் சங்கமாய் திரண்டு நின்றது, அதிலும் செங்கொடியின் கீழ் திரண்டு நின்று உரிமைக் குரல் கொடுத்தது அவர்களுக்கு கடும் ஆத்திரத்தை தந்தது. புதிதாய்ப் பிறந்திருந்த அந்த உழைப்பாளிவர்க்க சுயமரியாதை உணர்வுக்கு பாடம் புகட்டுவே இந்த கொடூரத்தைச் செய்தார்கள். 44 அப்பாவி உயிர்கள் துடிதுடித்து செத்தது இந்தியாவின் மனசாட்சியை அன்று உலுக்கி எடுத்தது. நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்திற்கு தக்க பதிலடி தரவேண்டும் எனும் நியாயமான உணர்வு எங்கும் நிறைந்திருந்தது. அதை சட்டபூர்வமாக நிறைவேற்றிடவே செங்கொடிச் சங்கம் முயன்றது. ஆனால் நமதுநீதிமன்ற முறைமை ஆளும் வர்க்க சார்பு கொண்டது என்பதை நிரூபிக்கும்வகையிலேயே உயர்நீதிமன்ற தீர்ப்பு இருந்தது. கோபால கிருஷ்ணநாயுடுஉள்ளிட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவரைப்போன்ற பணக்காரர்கள் இதுபோன்ற கொலைகளைச் செய்திருக்க மாட்டார்கள் எனும் நீதிமன்றத்தின் கணிப்பிற்கும் "சிவப்பானவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்" எனும் பாமரத்தனமான சொல்லாடலுக்கும் வித்தியாசமில்லாமல் இருந்தது. வெண்மணி அக்கிரமத்தில் நிலப்பிரபுத்துவத்தின் கோரமுகம் மட்டுமல்ல நீதிமன்றங்களின் கையாலாகத்தனமும் அம்பலமானது.

அந்த அநீதி நடந்ததன் ஐம்பதாம் ஆண்டு தினத்தில் பழைய நினைவுகள் நம் நெஞ்சுக்கூட்டிற்குள் பற்றி எரிவதன் ஊடே அதன் முழுப் பரிமாணத்தையும் உள்வாங்க வேண்டியிருக்கிறது. சந்தேகம் இல்லை, அது அடிப்படையில் வர்க்கப் போராட்டமே. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக பண்ணையடிமைகள் நடத்திய போரில் கருகிய சிகப்பு மலர்களே அந்த இளம் உயிர்கள்.ஆனால் அது வர்க்கப் போர் மட்டுமல்ல சமூகப் போராகவும் இருந்தது. அதனால்தானே மாண்டவர்கள் எல்லாம் தலித்துகளாக இருக்க, முக்கியமான குற்றவாளிகள் எல்லாம் தலித் அல்லாதவர்களாக இருந்தார்கள்!



2

வெண்மணித் தியாகிகளுக்கு எழுச்சிகரமான நினைவுச் சின்னத்தை அங்கே எழுப்பிய தொழிலாளி வர்க்கம் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் நிலப்பிரபுத்துவத்தின் அனைத்து முகங்களையும் இன்று உணர்ந்து வருகிறது. அந்த இரக்கமற்ற எரியூட்டல் நிலப்பிரபுத்துவத்தின் வர்க்ககுணத்திலிருந்து மட்டுமல்ல அதன் சமூக குணத்திலிருந்தும் பிறந்தது
என்பதைப் புரிந்து கொண்டுள்ளது.
இந்திய நிலப்பிரபுத்துவம் தனித்துவமானது. அது ஐரோப்பிய பாணியிலிருந்து வேறுபட்டது. இங்கு அது சொத்துடைமையால் மட்டுமல்லாது பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பாலும் வடிவமைக்கப்பட்டது. "பண்ணையடிமைகள் பேரம் பேசுவதா?" எனும் ஆளும்வர்க்க ஆதிக்கஉணர்விலிருந்து மட்டுமல்ல, "பள்ளுப் பறைகள் பேரம் பேசுவதா?" எனும் உயர்சாதிய ஆதிக்க உணர்விலிருந்தும் ஏற்பட்ட ஆத்திரமே அந்தப் படுகொலைகளுக்கு காரணம்.
இந்த 50 ஆண்டுகளில் தமிழக கிராமப்புற வாழ்வில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சீர்திருத்த சட்டங்கள், விவசாயம் நல்ல லாபம் தரும் தொழிலாக இல்லாமல் போனது, நகர்ப்புறங்களில் ஆலைத் தொழில் விரிந்தது, தகவல் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளின் வரவு போன்ற பல காரணிகளால் பண்ணையார் குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி, நிலவுடமை முன்னைக்காட்டிலும் பரவலாகியிருக்கிறது.
மறுபுறம் இடஒதுக்கீட்டின் பயனால் ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்ற தலித் மக்கள் பொருளாதார வாழ்வில் சற்றே முன்னேறினர். வேதனையான விஷயம் என்னவென்றால், இதை வரவேற்கும் மனநிலையை சாதியம் தடுத்து நிற்பது. சமூக வாழ்வின் காத்திரமான மாற்றங்களுக்கு பொருளாதார மாற்றம் அடிப்படையாக இருக்கிறது என்றாலும், மாற்றம் தானியங்கியாக நடந்து விடுவதில்லை என்பதை யதார்த்த வாழ்வு உணர்த்தி நிற்கிறது.
"பேண்ட் சட்டையும் கூலிங் கிளாசும் போட்டுவந்து நம் வீட்டுப் பெண்களை மயக்கி விடுகிறார்கள்" என்று தலித் இளைஞர்களைச் சாடும் உயர்சாதியவாதிகளின் சொல்லாடலில் இது துல்லியமாக வெளிப்படுகிறது. இதன்வழி தம் வீட்டுப்பெண்களின் உணர்வுகளையும் மலினப்படுத்துகிறோம் என்பதைக்கூட மறந்து விட்டு இப்படி கொந்தளிக்கிறார்கள். இதன் உச்சகட்டமாய் ஆணவப் படுகொலைகளை எந்தக் குற்றஉணர்வின்றிச் செய்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை வர்க்கப் போராட்டத்தை பொருளியல் தளத்தில் மட்டுமல்லாது சமூகத் தளத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது என்பதைத்தான்
ஆணவப்படுகொலைகள் உள்ளிட்ட இன்னும் தொடரும் விதவிதமான தீண்டாமைக்கொடுமைகள் உணர்த்துகின்றன. இதை நன்கு உள்வாங்கிய காரணத்தால்தான்
மார்க்சியர்கள் வர்க்க அமைப்புகளில் மட்டுமல்லாது "தீண்டாமை ஒழிப்பு முன்னணி" போன்ற சமூக அமைப்புகளிலும் இப்போது தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.



3

உத்தபுரம் தீண்டாமைச்சுவரை அகற்ற வைத்ததிலிருந்து ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கேட்டு நடைபயணம் நடத்தியது முதல் அதன் களப்
பணிகள் அனேகம். சாதிப் பிரச்னை நாடு தழுவியது என்பதால் அகில இந்திய அளவில் அமைந்துள்ள "தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி"யிலும்
இடம் பெற்றுள்ளது. அதன் மாநாட்டை மதுரையில் வெற்றிகரமாக நடத்தித் தந்துள்ளது. மார்க்சியர்கள் பங்கேற்றுள்ள இந்த சமூக அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு தீண்டாமை ஒழிப்பில் துவங்கி சாதி ஒழிப்பை நோக்கி வேகமாக நடை போடுவது.வர்க்கப் போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியா கூறாக சாதி ஒழிப்பை மாற்றாமல்
இந்த நோக்கை எட்ட முடியாது என்பதில் மார்க்சியர்கள் தெளிவாக இருக்கிறோம். இதன் அர்த்தம் வர்க்க போராட்டத்தை பொருளாதாரப் போராட்டமாக சுருக்கவும்
கூடாது, சாதி ஒழிப்பை உணர்வு தளத்தில் மட்டும் நடத்தக் கூடாது என்பதாகும். புறம், அகம் இரண்டும் இயைந்து செல்லும் விரிந்த இயக்கமாக மாற்ற வேண்டும்.
வெண்மணி உள்ளிட்ட தஞ்சைத் தரணியில் இன்று சாதிய ஒடுக்குமுறைகள் ஒப்புநோக்கில் குறைந்திருக்கின்றன என்றால் அதற்கு காரணம் இத்தகைய இயக்கம்தான். இதை மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டியுள்ளது.
தமிழக கிராமப்புறங்களில் இடைநிலைச் சாதியினரும் தலித் மக்களும் எதிரும் புதிருமாக இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. யதாரத்தம் என்னவென்றால்
இடைநிலைச் சாதியினரிலும் ஆகப்பெரும்பாலோர் உழைக்கும் மக்களே. விவசாயக் கூலிகளில் பாதிக்குப் பாதியாக இந்த இரண்டு பகுதி மக்களும்தான் உள்ளனர். வர்க்கரீதியாகப் பார்த்தால் இந்த இரு பகுதியினரின் நலனும் ஒன்றே. இவர்கள் வர்க்கரீதியாக ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று இடைநிலைச் சாதிகளில்
உள்ள ஆதிக்கவாதிகள் சாதிய ஒடுக்குமுறைகளைத் தூண்டிவிடுகிறார்கள். இவர்களை அம்பலப்படுத்தியும், சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து களத்தில் நின்று
போராடியும் வர்க்க ஒற்றுமையைக் கட்ட வேண்டும். இத்தகைய ஒற்றுமையே தீண்டாமையை ஒழிக்கும், சாதி ஒழிப்புக்கான அடித்தளத்தை அமைக்கும் .
இன்று புதிய அபாயமாய் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது மட்டுமல்லாது, அது தமிழகத்திலும் வேர்விடப் பார்க்கிறது. ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான
பாஜக ஏதோ மதச் சிறுபான்மையோருக்கு மட்டும் எதிரானது என்று நினைத்துவிடக்கூடாது. அது அவர்களை எதிரிகளாகப் பொய்யாகக் கட்டமைப்பதன் நோக்கமே
மெய்யான எதிரிகளாகிய பிராமணியத்தையும், நெறியற்ற (சலுகைசார்) முதலாளியத்தையும் வெகுமக்களிடமிருந்து காப்பாற்றுவதுதான்.
அந்த வகையில் அவர்கள் இந்து வெகுமக்களின் எதிரிகளும்கூட. அவர்கள் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்து களமாடியதில்லை. மாறாக அவற்றை
காப்பாற்ற முனைகிறவர்கள். இந்த உண்மையை உரக்கச் சொல்லி அவர்களது சதிவேலையை முறியடிக்கவும் சமூகநீதிப் போராட்டத்தை தொழிலாளி வர்க்கப்
போராட்டத்துடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வெண்மணித் தீயில் எரிந்து சாம்பலான அந்த 44 பேரின் தியாகம் வீணாகாது. அவர்களைச் சுட்டுப் பொசுக்கிய தீ சாதியக் கட்டமைப்பையே ஒருநாள் சுட்டுப்பொசுக்கத்தான் போகிறது. அதற்கான ஞான வெப்பத்தை அது தந்த வண்ணம் உள்ளது.
(விகடன் தடம் ஏட்டிற்காக எழுதியது)



Comments