குவைத் அனுபவம்




1

நட்சத்திர ஹோட்டலிலும் அந்த ரொட்டி மட்டும்...

"டிச. 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள்" கூட்டத்தில் பங்கேற்பதற்காக மனிதநேயமக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது மற்றும் அதன் பொறுப்பாளர்களில் ஒருவரான தஞ்சை பாதுஷா ஆகியோரோடு குவைத் போய்ச்சேர்ந்தேன்.

விமானநிலையத்தில் அப்படியொரு அன்பான வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. முப்பது பேருக்கு மேலிருக்கும். அந்நியமண்ணில் இருப்போருக்கு தாயகத்திலிருந்து வருவோரைக் காண அந்த தாயகமே இடம் பெயர்ந்து வந்ததாக இருக்கும் போலும்.

வந்திருப்பவர்கள் அங்கே சங்பரிவாரிகளின் வெறுப்பு அரசியலை எதிர்த்து போராடுகிறவர்கள் என்பதால் ஏற்பட்ட பிரியம் என்றும் கூறலாம். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தால்
விறுவிறுவென்று தாக்கும் கூதல்காற்று! "நேற்றுவரை இப்படிஇல்லை, இன்றுதான் இப்படி" என்று பதட்டத்தோடு கூறினார்கள்.

அதிலே ஒருவர் தனது ஓவர் கோட்டைகழட்டி எனக்கு மாட்டிவிட்டார். "நண்பரே உங்களுக்கு?" என்ற என்னை "என்னால் சமாளிக்க முடியும், உங்களுக்கு இது புதிது அல்லவா?" என்று பதிலளித்தார்.

நாடு திரும்பும் வரை அதை என்னிடமே விட்டுவைத்தார். ஒவ்வொரு சின்னசின்ன விஷயத்திலும் அவர்களின் அக்கறை வெளிப்பட்டது. வரவேற்பு முடியும் போதே இரவு10 1/2 மணிக்கு மேலாகிப்போனது.

அவர்களோ எங்களை அறைக்கு அழைத்துச் செல்லாமல் நேரே ஹோட்டலுக்கு கூட்டிப் போனார்கள். அது குவைத் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையிலானது. நம்மூர் ஹரிக்கேன் விளக்கெல்லாம் இருந்தது! நம்மது அங்கிருந்ததா? அவர்களுடையது நமது பூமியில் இருந்தததா? உணவும் அரபு உணவு. வெகுமக்கள் உணவான ரொட்டி வந்தது.

நட்சத்திர ஹோட்டல் என்றாலும் அந்த ரொட்டியின் விலை மட்டும் மிகக்குறைவாம். காரணம் அதற்கு அரசு மான்யம் தருகிறது. ஒரு நண்பர் சொன்னார்: "ரொட்டி கிடைக்கவில்லை என்று நாட்டில் ஒருவரும் வாடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது". ஏதோ இந்தியாவில்தான் மான்யம் தரப்படுகிறது எனப் புலம்பும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளுக்கு இது சமர்ப்பணம்.

 உலகின் ஒரு மகாபணக்கார நாட்டிலும் அது இருக்கத்தான் செய்கிறது. விருந்து முடிந்து தங்கும் அறை சென்றபோது நள்ளிரவு மணி1. ஆனாலும் அலுப்பு தெரியவில்லை. அவர்களின் நேசம் எங்களை அப்போதும் அன்றலர்ந்த பூக்களாக வைத்திருந்தது.




2

அந்த கூதல் காற்றிலும் சரியான கூட்டம்!

டிச.8 மாலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் கூட்டம். 6 மணியளவில் ஹோட்டலைவிட்டு வெளியேவந்தால் மீண்டும் கூதல்காற்று கிளம்பியிருந்தது.

அந்த வெயில் பிரதேசத்தில் இப்படியொரு குளிர் காற்றை நான் எதிர்பார்க்கவில்லை. இதில் எப்படி மக்கள் கூட்டத்திற்கு வருவார்கள்? அரங்கத்திற்கு போனால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். பாபர் மசூதி இடிப்புபற்றிய உணர்ச்சிகரமானபாடலை ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்.

எனக்கு நாகூர் ஹனிபா நினைவுக்கு வந்தார். அவரது குரல்வளமும் திமுக வளர்ந்ததற்கு ஒரு காரணம் அல்லவா? குவைத் தமுமுக நண்பர்கள் உரையாற்றினார்கள். அவர்களே பிரமாதமான பேச்சாளர்களாக இருந்தார்கள். ரசித்து கேட்டுக் கொண்டிருந்தேன். சட்டென்று அதை உணர்ந்தேன். மணி ஏழு இருக்கும். அரங்கு நிரம்பியிருந்தது. 800 பேருக்கு மேலிருந்தார்கள். அமர இடமில்லாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

 "இந்தகாற்று அடிக்காமலிருந்திருந்தால் இன்னும் கூட்டம் வந்திருக்கும்"என்று ஆதங்கப்பட்டார் பக்கத்திலிருந்த நண்பர்.அந்த தொலைதூரதேசத்தில் ஒரு பொது நிகழ்வுக்கு இத்தனைபேர் வருவார்கள் என்றுநான் கொஞ்சமும்நினைக்கவில்லை. என்ன காரணம்? அந்த அநீதி நடந்து 25 ஆண்டுகளான பிறகும் நீதி கிடைக்கவில்லையே எனும் ஆக்ரோஷேம்.

அப்புறம், அதை அமைப்புமயமாக்கியுள்ள தமுமுக மற்றும் மமக தலைவர்களின் நிர்வாக ஆற்றல். கூடுதல் உற்சாகத்தோடு பேசி
னேன். கூட்டமும்ஆர்வத்தோடு கேட்டது. பொதுச்செயலாளர் அப்துல் சமது பேசி முடிக்கும் போது மணி 9 3/4. கூட்டம் சிறிதும் கலையவில்லை என்பது மட்டுமல்ல அதற்கு பிறகு எங்களோடு புகைப்படம் எடுக்க வரிசையாக வந்தார்கள். 200 பேராவது எடுத்திருப்பார்கள். அசந்து போனேன் அவர்களின் உத்வேகத்தைப் பார்த்து.

 "ஆர்எஸ்எஸ் மதவெறி அபாயம் இந்தியாவில் கிளம்பியிருக்கிறது என்றால் அதை முறியடிக்கும் மனிதநேய சக்தி உலகம் முழுக்க புறப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம்" என்று நான் பேசியது சரிதானே?




3

பாலைவனத்தில் வரிசையாகப் பண்ணைகள்!

மறுநாள் அந்த நாட்டை சுற்றிக் காண்பித்தார்கள். 100 கி மீ தூரம்தான். ஒரு படத்தில் வடிவேலு சொன்னது போல ரோட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது. மயன் அப்போதுதான் கட்டியது போலிருந்தது முழு நாடும். ஒரு பழைய வீட்டைக் காணோம். எல்லாம் புத்தம் புதிது. "எப்படி?" என்று கேட்டேன். "சதாம்ஹுசேனின் ஈராக் போர் தொடுத்ததில் வீடுகள் பெரும் சேதமடைந்ததால் புதிதாக கட்டவேண்டியதாகிப் போனது" என்றார்கள்.

இன்னும் கட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அந்த ஈராக் எல்லைக்கு கார் சென்றபோது இரவாகிப் போனது. அப்படியும் அந்த அதிசயத்தை காண முடிந்தது. ஆம், அந்த பாலைவனத்தில் வரிசையாக விவசாய பண்ணைகள்!

எல்லாம் குவைத்தின் பணக்காரகுடிமக்களுக்கு சொந்தமானவை. அவற்றை பராமரிக்கும் வேலையில் நமது தமிழர்கள் இருக்கிறார்கள். நம்மவர்களின் புத்திசாலித்தனமான உழைப்பில் அந்த பாலைவனச் சோலைகள் எழுந்திருந்தன. ஒரு பண்ணைக்குள் நுழைந்து பார்த்தபோது.பெரும் பெரும் கூடாரங்களுக்குள் நம்மூர் முருங்கை, வெண்டி, பீன்ஸ் காய்த்திருந்தன.

"பாலை மணலில் இது எப்படி?" என்றேன். பணியாளர் சொன்னார் : "அதற்கேற்ற வகையில் உரமும் நீரும் விட்டால் சாத்தியமே ". அந்த செடிகளுக்கான இல்லத்தில் ஒருபுறம் நீருக்கு ஏற்பாடு என்றால் மறுபுறம் அதைஈர்க்க பெரிய மின்விசிறி! கடும் கோடையிலும் அந்த செடிகள் சிலுசிலு சாரலை அனுபவித்தன!

"இங்கு காய்த்த ஒரு சுரைக்காயை அனுப்பிவைத்தேன் எங்க குவைத்திக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்றார் அந்தபணியாளர். எஜமானர் தங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கிறார்கள் நம்மவர்கள்.

குவைத்தில் பாலைவனத்தையும் விவசாய நிலமாக மாற்றுகிறார்கள், நமது நாட்டிலோ மீத்தேன்என்றும், ஹைட்ரோகார்பன் என்றும் விவசாய நிலத்தையும் பாலவனமாக்கு கிறார்களே என்று மனதில் நொந்தபடி தங்கும் அறைக்கு திரும்பினேன்.




 4

இதுதான் நமது தமிழ் மரபு


இங்குள்ள தமுமுக-மமக நண்பர்கள் மிகவும் கலகலப்பானவர்கள். ஒருவருக்கொருவர் கேலி பேசிக்கொண்டே காரியமாற்றுகிறார்கள். "குவைத் மண்டல மமக நிர்வாகி தர்மராஜ்" என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள்.

இந்துவான அவர் முஸ்லிம் நண்பர்களோடு மிக அந்நியோன்னியமாகப் பழகினார். "இவர்களது உண்மையான மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மை கண்டே இந்தக் கட்சியில் சேர்ந்தேன்" என்றார் அவர். அவர்களோ "தர்மா எப்படிப்பட்டவர் தெரியுமா? நாங்கள் ரம்ஜான்நோன்பு நோற்கும்போது அவரும் நோன்பிருப்பார்.

கேட்டால், நீங்கள் எல்லாம் சாப்படாமலிருக்கும்போது நான் மட்டும் எப்படி சாப்பிடுவது?என்பார்" என்றார்கள். இந்த சமூக நல்லிணக்கம்தான் நமது இயல்பான தமிழ் மரபு. இதைக் கெடுக்கத்தான் ஒரு கூட்டம் கங்கணம் கட்டி அலைகிறது. இங்கு எல்லாரிடமும் கார் இருக்கிறது. சந்திக்க வேண்டிய இடத்திற்கு டாண்டாணென்று ஆஜராகிவிடுகிறார்கள்.

குவைத்தின் அடையாளமாகிப்போன சுழலும் கோபுரத்திற்கு கூட்டிப் போனார்கள். கடற்கரையில் அமைந்துள்ள அதிலிருந்து பார்க்கும்போது குவைத் நகரம் முழுமையாகத் தெரிந்தது.

விதவிதமான அடுக்குமாடி கட்டடங்களுடன் அமைந்திருந்த ஒரு சின்ன துபாய்! கிளம்பிவரும்போது ஒரு நண்பர் "அதோ பழைய கார்களின் கண்காட்சி" என்று சின்னப் பிள்ளை போல கூவினார். போய்ப் பார்த்தால் எனக்கு அவை புதிய கார்களாகத் தெரிந்தன.

"அப்படி பழசை மாற்றியிருக்கிறார்கள்" என்றார் அவர். "எதற்கு விற்பனைக்கா?"என்றேன். "இல்லை சும்மா பெருமைக்கு" என்றார். அங்குள்ள பணம் படைத்தவர்களுக்கு இது பொம்மை விளையாட்டு போலும் என நினைத்துக் கொண்டேன்.



 5

அங்குள்ளவர்களுக்கு இந்தியக் கவலையே பெருங்கவலை

குவைத்தி தினார் எனும் அந்தநாட்டு நாணயம் மிகமதிப்பு வாய்ந்தது. நமது ரூபாய் 214 க்கு சமம். ஒரு நாளைக்கு 10 தினார் சம்பாதித்தால் போதும். இஸ்லாமின் ஐந்து இறைக் கட்டளைகளில் ஒன்று தர்மம் செய்தல். எல்லா மதங்களும் தானம் பற்றி பேசுகின்றன. இஸ்லாம்தான் அதையொரு இறைக் கட்டளையாக்கியிருக்கிறது.

இதனால் அங்குள்ள பணக்காரர்கள் அவ்வப்போது தானம் செய்கிறார்கள். அப்படியொருவர் தானம் செய்யப்போகிற விளம்பர பிளக்ஸ் போர்டை பார்த்தேன். அங்கு வயிற்றுப் பாட்டுக்கு கவலையில்லை என்பதுமட்டுமல்ல, எப்படியும் பிழைத்து கொள்ளலாம். இதனால் அந்த நாட்டிற்குள் நுழைகிறவர்கள் அதைவிட்டு வெளியேறாமல் ரகசியமாகத் தங்கிவிடுகிறார்கள்.

இதை தடுப்பதில் குறியாக இருக்கிறது அந்த நாடு. அந்த நாட்டைவிட்டு வெளியேறி விட்டேனா என்று நான் தங்கிய ஹோட்டல்காரர் எனது கடவுச் சீட்டில் குத்தப்பட்ட எக்சிட் முத்திரையை அனுப்பச் சொன்னார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்! ஆனால் சட்டப்படி அங்கு தங்கியிருப்பவர்களும் அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றுவிட முடியாது.

நம்மவர்களில் பலரது குடும்பங்களும் இந்தியாவில்தான் உள்ளன. பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கு நமது நாடு பற்றிய அக்கறை இருக்கிறது. இங்கு நடைபெறும் சங்பரிவாரிகளின் ஆட்சியால் மத நல்லிணக்கத்திற்கு வந்துள்ள பேராபத்து பற்றி அவர்கள் மிகுந்த கவலையோடு இருக்கிறார்கள். பேசுகிறவர்கள் எல்லாம் 2019 தேர்தலிலாவது இந்த ஆட்சியை அகற்றவேண்டாமா, அதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்று கேட்டார்கள்.

இந்தியா குவைத் போல ஒரு சிறிய நாடு அல்ல, இங்குள்ள மாநிலங்களில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது, அதையெல்லாம் கணக்கில் கொண்டு மக்களை மதவெறி சக்திகளுக்கு எதிராகத் திரட்ட வேண்டியுள்ளது என்பதை சுட்டினேன். அதேநேரத்தில் அவர்களது கவலையை பகிர்ந்து கொள்வதாகவும், நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை இருப்பதாகவும் சொன்னேன். இந்தியாவிற்கு திரும்பும் நேரம் நெருங்கியது.

அப்போதும் விசிக வின் தாய்மண் இலக்கிய மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த எழுச்சி நாள் கூட்டத்தில் பங்குகொண்டேன்.அங்கே 150 பேருக்கும் மேற்பட்டோர்
குழுமியிருந்தார்கள். அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை எடுத்து சொன்னவன் திருமா அவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் பற்றி இப்படி முரசறைந்தேன்: "அவரது தலையை மட்டுமல்ல தலைமுடியைக்கூட சங்பரிவாரிகளால் பிடுங்கமுடியாது.

அவரது மதவெறி எதிர்ப்பு நிலைக்கு ஆதரவாக மனிதநேய சக்திகள் உள்ளன". விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்த தமுமுக மற்றும் விசிக நண்பர்களை பிரியமனமின்றி திரும்பித் திரும்பி பார்த்தபடியே இமிகிரேசன் பகுதிக்குள் நுழைந்தேன். (முடிந்தது)

Comments