மதவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணையும் தமிழக மக்கள்


மதவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணையும் தமிழக மக்கள் -அருணன் பேட்டி

கீழே உளள சுட்டியைச் சொடுக்கி அருணனின் விரிவான பேட்டியைக் காணலாம்...

https://www.youtube.com/watch?v=87_w9V-iB28&feature=youtu.be


 பன்முகப் பண்பாட்டுத் தளத்தை பாதுகாக்க தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

சென்னையில் அக் 3 அன்று தொடக்க விழா

சென்னை, அக்.1-
தமிழகத்திலும் ஊடுறுவும் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு அபாயத்தைத் தடுக்கவும், பன்முகப்பண்பாட்டுத் தளத்தைப் பாதுகாக்கவும் ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது.“இந்தியாவின் தனிச்சிறப்பு பன்முகப் பண்பாட்டுத்தளம்தான்.

நாட்டின் அரசமைப்பு சாசனம் அதைஉறுதிப்படுத்துகிறது. ஆனால் இன்றைய அரசியல் - சமூக நிலைமைகள் இந்த மாண்பு பாதுகாக்கப்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மத்திய ஆட்சியதிகார பலத்தோடுமதவெறி சக்திகள் தங்களது ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புவன்மங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன,” என்று அமைப்பின்அறிமுகக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.“முற்போக்கு இயக்கங்கள் தடம்பதித்த தமிழ்நாட்டையும் மதவெறிஆதிக்க சக்திகள் தீண்டத் தொடங்கியுள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழல் அதற்குப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது,” என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உருவெடுப்பது பற்றிச் சென்னையில் ஞாயிறன்று (அக்.1) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் அருணன், “உத்தரப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் நண்பருடன்டீ பருகியதற்காக ஒரு இந்துப் பெண்ணை பாஜக பெண் பிரமுகர் தாக்கியிருக்கிறார்.

முஸ்லிம் இளைஞரை ஒரு இந்துப் பெண் மனம்விரும்பித் திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சியில் பஜ்ரங் தள்அமைப்பினர் ரகளை செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர் ஒருவர் முஸ்லிம் என்பதற்காக ஒரு ஆசிரியர் அவரை ‘தீவிரவாதி’ என்று அழைக்க, மன உளைச்சலோடு அந்த மாணவர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். மதவெறி அமைப்புகள் வெறும் பரப்புரையோடு நிற்கவில்லை, படுகொலைகளையும் நிகழ்த்தி வன்முறையால் ஒற்றைக் கலாச்சாரத்திணிப்புச் சூழலை ஏற்படுத்த முயல்கின்றன,” என்றார். மாட்டிறைச்சி எதிர்ப்பு வன்முறைகளில் இதுவரையில் 35 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். அதே பிரச்சனையில் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைவரோ, பசுப்பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

அந்த ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புத் திட்டத்திற்கு ஒத்துவராதது என்பதால்தான், புதைந்திருந்த தமிழக வரலாற்றுக்கு சாட்சியமாகும் கீழடி ஆய்வின் மீது மண்ணைப் போட்டு மூடுவதற்கு முயல்கிறார்கள். விருதுநகரில் மதவெறிக்கு எதிராகவும் மணல்கொள்ளைக்கு எதிராகவும் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கனகராஜ் கொலை செய்யப்பட்டார்.கோவில்களுக்குச் செல்கிறபோதே தேவாலயங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் செல்கிற பண்பாட்டை உடைய தமிழக மக்களிடையே மதப் பகைமையைத் தூண்டிவிடும் சூழ்ச்சிகளைத் தடுக்க வேண்டியிருக்கிறது. நல்லிணக்கச் சிந்தனைகளைப் பல்வேறு வகைகளில் பரப்புவது, பகைமை தூண்டப்படும் இடங்களில் அதைத் தடுக்க மக்களிடையே களப் பளியாற்றுவது, பாதிக்கப்படுவோருக்கு உதவுவது என்ற பரந்துபட்ட செயல்பாடுகளில் இந்த மேடை ஈடுபடும் என்றார் அருணன்.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார், “ஆர்எஸ்எஸ்-பாஜகநினைப்பதைச் செயல்படுத்துகிறவர்களாக அதிமுக அரசுமாறியிருக்கிறது.

சாதி அமைப்புகளை இப்போது மதவெறி அடிப்படையிலும் அணி சேர்க்கிறவேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன,” என்றார்.இந்த மேடை மக்களின் சொந்தமத நம்பிக்கைகளுக்கு எதிரானதல்ல. ஆலயங்கள் மதவெறித் தலங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டுகிற முயற்சிகளில் அமைப்பு ஈடுபடும். பல்வேறு அரசியல் கண்ணோட்டங்கள் உள்ளவர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் இணைந்து இதில் செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.பத்திரிகையாளர் ‘இந்து’ என். ராம், கல்வியாளர் டாக்டர் வசந்தி தேவி, தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம். ராசேந்திரன், மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், கல்வியாளர் தாவூத் மியாகான், திரைப்படக் கலைஞர் ரோகிணி, மருத்துவர் டி. காமராஜ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் இந்த அமைப்பில் கரம் கோர்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, அத்துடன் சென்னை மக்கள் மேடை ஆகிய அமைப்புகளின் தொடக்கவிழா செவ்வாயன்று (அக்.3) மாலையில் சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது. மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, தொழிற்சங்கத் தலைவர் அ. சவுந்தரராசன், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பத்திரிகையாளர் விஜயசங்கர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.செய்தியாளர் சந்திப்பில் சென்னை மேடை பொறுப்பாளர் இரா.தெ.முத்து, பத்திரிகையாளர் அ.குமரேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

Comments