தீக்கதிர் நாளிதழில் கனவுகளின் மிச்சம் நூல் விமர்சனம்

கனவுகளின் மிச்சம்





உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் விருப்பங்கள், ஆசைகள்,லட்சியங்கள், கனவுகள் உண்டு. பெற்றோர்தன் பிள்ளை எப்படிப்பட்ட ஆளாக வரவேண்டும் என்று நினைப்பது ஒன்று. பிள்ளை தான் எந்த மாதிரியான ஆளாகவாழவேண்டும் என்று நினைப்பது மற்றொன்று. ஆனால் வாழ்க்கையின் போக்கில், சூழலின் தாக்கில், தற்செயல் நிகழ்வில் அவை திசைமாறிப் போவதும்தடுமாறிப் போவதும் உண்டு. வழிமாறும்பயணத்தில் புதுவழியும் புது வாழ்வும் கிடைப்பதும் உண்டு. அப்படியான தற்செயல் நிகழ்வின் நல்ல விளைச்சலாக தமிழ் மண்ணுக்கு கிடைத்த பன்முக ஆற்றலாளர் அருணன்.
அவர் எழுத்தாளராக, பேராசிரியராக, ஆய்வாளராக, இலக்கியவாதியாக, தத்துவவாதியாக என பன்முகப் படைப்பாளியாக பரிணமித்திருக்கிறார் என்பதை அறிவோம்.பிறரைப் பற்றிய வரலாற்று நூல்களை எழுதியவர் தன்னைப் பற்றி எழுதிய நூல் கனவுகளின் மிச்சம்- ஓர்அறிவுஜீவியின் தன் வரலாறு. தமிழகத்தில் பல சுயசரிதைகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேசப்பட்டிருக்கின்றன. கவிஞர் கண்ணதாசனின் வனவாசம், எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஓர்இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் பிரபலமானவை. தமிழ்த் தாத்தாஉ.வே. சாமிநாதய்யரின் என் சரித்திரம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் என்கதை போன்றவை வேறு தளத்தைச் சேர்ந்தவை. மார்க்சிய எழுத்தாளர் பல்துறைவித்தகர் ராகுல்ஜியின் சுயசரிதை மிகுந்த சிறப்புக்குரியது. அவரது தேடல் புத்தமத தெளிவுக்கானஞானத்தேடல்.
அது அவரை மார்க்சியத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், தோழர் அருணனின் ஆய்வுத்தேடலோ மார்க்சிய ஞானத்தோடு பிராமணியம் பற்றியும் தமிழர் தம் தத்துவம் பற்றியும் உலகத் தத்துவஞானங்களின் இயல்பு குறித்தும் நடந்தது. தமிழகஅரசியல் குறித்தும் சமூக சீர்திருத்தம்பற்றியும் அவர் நடத்திய ஆழமானஆய்வு தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் அவசியமானது. இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களுக்கு இன்றியமையாதது.ஒருவர் எத்தகைய வாழ்க்கையை மேற்கொள்கிறாரோ அதற்கு ஏற்பவே அவரது வாழ்க்கை வரலாறு அமையும். நாடக, திரையுலக கலைஞர்கள் டி.கே.சண்முகம் , சகஸ்ரநாமம் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு அந்தத் தளத்தில் மட்டும் அமைந்தது. ஆனால்பலதுறைகளிலும் தடம் பதித்த தோழர் அருணனின் வரலாறு ஒரு தனிவகை தான். அதனால் தான் அவர் தன் வரலாறை எழுதப் போகும் முன் உ.வே.சா.அவர்களை முன் மாதிரியாகக் கொள்கிறார். ஆனால் அவரளவு பெரிய ஆள் இல்லையே என்று அடக்கமாகவும் கூறியிருக்கிறார். உ.வே.சா. தமிழ் இலக்கியச் செல்வத்தை தேடித்தேடி அலைந்து தமிழ் மக்களுக்குத் தந்தார்.
ஆனால், அருணன் அவர்களோ சமூகத் தளத்திலும் தத்துவத்தளத்திலும் அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் என தன் தேடலை மிக ஆழமாக நடத்தியிருக்கிறார். அதன் விளைச்சல் தான் தமிழக சமூக சீர்திருத்தம் - 200 ஆண்டு வரலாறு, காலம் தோறும் பிராமணியம், யுகங்களின் தத்துவம், கடவுளின் கதை, தமிழர் தத்துவமரபு ஆகியவை.ஒருவர் தான் எவ்வாறு அறியப்பட வேண்டும் என விரும்புதல் இயல்பே. அவ்வகையில் தான் அருணன் தனது வரலாறை படைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளாகத் தான் கருதியவற்றை எல்லாம்,பள்ளி வாழ்க்கை, பேராசிரியப் பணிதமுஎகச பொதுச் செயலாளர், நாவலாசிரியர், ஆய்வாளர், பல்கலை.செனட்உறுப்பினர் பணி, தனது படைப்புகளுக்காக தொடர்புடைய இடங்களுக்குப் பயணித்தல், மார்க்சின் கல்லறை, ஐரோப்பிய பயணம் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்கள் என பலவற்றையும் 30 அத்தியாயங்களில் தந்திருக்கிறார்.
தனதுசொந்த வாழ்விலும் கட்சி வாழ்விலும்மகிழ்ந்த, நெகிழ்ந்த, கசந்த, கனத்த, உகந்தகணங்களையும் திறந்த மனதோடு வெளிப்படுத்தியிருக்கிறார். தனதுபடைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்.‘‘சொல்லப் போனால் எனது வாழ்வின்சாரம் இதுதான். மார்க்சியத்தை இப்படிஇருவிதமாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டே எனது எழுத்துக்களும் பேச்சுக்களும் இருந்தன. மார்க்சியம் எப்படி எனது சுவாசமாக இருந்ததோ, அப்படிஅது உள்மூச்சு, வெளி மூச்சாகவும் இருந்தது. இந்த மண் வித்தியாசமானது என்று மார்க்சியத்தைப் புறக்கணித்ததும் இல்லை. மார்க்சியமே எல்லாம்என்று இந்த மண்ணின்தனித்துவங்களைப் புறக்கணித்ததும் இல்லை.’’ என்றுஅவர் கூறியிருப்பது வாசகர்கள் மனம் கொள்ளத்தக்கது.திருவள்ளுவரை நாம் இலக்கியவாதியாகத் தான் பார்க்கிறோம்.
தத்துவவாதியாகப் பார்ப்பதில்லை. அது போல்அருணனை எழுத்தாளராகவே பார்க்கிறோம். ஆனால் அவர் ஒரு தத்துவ ஆய்வாளர் என்பதை நினைவில் கொள்ளும்வகையில் அமைந்துள்ளது அவரது கனவுகளின் மிச்சம்; தனது கனவுகள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடனே நூலை நிறைவு செய்திருக்கிறார். இந்த நூலைப் படித்தால் அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் படித்தஎண்ணம் ஏற்படுவது உறுதி. ஏனெனில்அதன் ஒவ்வொன்றின் நோக்கத்தையும், உள்ளடக்கத்தையும் அவரே சுருங்கச் சொல்லியிருக்கிறார் என்பது சிறப்பு.

- பா.முருகன் 

Comments